மும்பை,
நடிகை அர்ச்சனா பூரன் சிங் தனது பள்ளி பருவத்தின் மிகவும் வேதனையான நினைவுகளில் ஒன்றை நினைவு கூர்ந்துள்ளார். அவருக்கு ஆறு வயது இருக்கும்போது கான்வென்ட் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் 10 முறை பிரம்பால் அடிவாங்கியதாக கூறினார். என்ன தவறு என்று நினைவில் இல்லாவிட்டாலும், அடி வாங்கியது மட்டும் இன்றும் நினைவில் இருப்பதாக அவர் கூறினார்.
பிரபல நடிகை அர்ச்சனா பூரன் சிங், டேராடூனில் தனது பள்ளிப் பருவத்தில் நடந்த மறக்க முடியாத நிகழ்வுகளை பகிர்ந்துள்ளார்.
அவர் கூறுகையில், "நான் ஒன்றாம் வகுப்பு படித்தபோது, அதாவது 6 வயதில், பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் அழைத்து செல்லப்பட்டேன். அவர் ஒரு பெரிய பிரம்பை எடுத்து என்னை 'கெட்ட பிள்ளை' என்று கூறி, என் கையில் 10 முறை அடித்தார். நான் என்ன தவறு செய்தேன் என்பது இப்போது நினைவில் இல்லை. ஆனால் அந்த பிரம்படியின் வலி மட்டும் இன்னும் மறக்கவில்லை" என்று தெரிவித்தார்.
மேலும், பள்ளியில் தவறு செய்த மாணவர்களை வகுப்பறைக்கு வெளியே உள்ள காரிடாரில் முழங்காலிட்டு நிற்க வைப்பது வழக்கமாக இருந்ததாகவும், அந்த தண்டனை மிகவும் அவமானகரமான அனுபவமாக இருந்ததாகவும் அவர் நினைவுகூர்ந்தார்.
பள்ளிப் பருவத்தில் எப்போதும் வகுப்பில் முதல் மாணவியாக இருந்ததாக அர்ச்சனா தெரிவித்தார். இருப்பினும், குறும்புத்தனமும் அதிகமாக இருந்ததால், ஆசிரியர்கள் அடிக்கடி "உன் திறமையையும் ஆற்றலையும் வீணடிக்கிறாய்" என்று கண்டிப்பார்களாம்.
பின்னர் நடிகையாக மாறியபோது, தனது ஆசிரியர்கள் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்ததாக அர்ச்சனா கூறினார்.
அவர் கூறுகையில், "நாங்கள் நீ ஐஏஎஸ் அல்லது ஐஎப்எஸ் அதிகாரியாக வருவாய் என்று நினைத்தோம். ஆனால் நீ நடிகையாகிவிட்டாய். உன் வாழ்க்கையே பாழாகிவிட்டது என்று ஆசிரியர்கள் என்னிடம் கூறினார்கள்" என்று சிரிப்புடன் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.