மறைந்த டைரக்டர் ஜீவாவிடம் இணை இயக்குனராக இருந்தவர், ஆ.லட்சுமிகாந்தன். பசுபதி, அஜ்மல் நடித்த டாக்சி 4777 படத்தை இயக்கிய இவர் அடுத்து, புறா பறக்குது என்ற படத்தை டைரக்டு செய்கிறார். இந்த படத்தை பற்றி அவர் கூறுகிறார்:
காதல் என்பது அமுதசுரபி மாதிரி. அதனால்தான் காதலை மையமாக வைத்து ஆயிரக்கணக்கில் படங்கள் வெளியாகியுள்ளன. இன்னும் ஆயிரம் படங்கள் உருவாகவும் உள்ளன. அந்த வகையில் நாங்கள் உருவாக்கும் காதல் படம், இது.
முதல் காட்சியில் ஒரு பஸ் நிலையத்தில், ஒரு பெண்ணை பார்த்ததுமே இவள்தான் தனக்கானவள் என்று முடிவு செய்கிறான், ஒரு இளைஞன். கடைசி காட்சியில் அவன் அவளிடம், ஐ லவ் யூ சொல்கிறான். இதுதான் படத்தின் கதை. காதலியின் மனதை அவன் எப்படி வெல்கிறான்? என்பதே திரைக்கதை.
இதில் ஆர்யா, ஷாம், பசுபதி, அஜ்மல், அசோக், சிம்ரன், மீனாட்சி, பூஜா ஆகியோர் சிறப்பு தோற்றங்களில் வருகிறார்கள். புதுமுகங்கள் ஆருண், கவுதம் ஆகிய இருவரும் கதாநாயகன்களாக அறிமுகமாகிறார்கள். ஜெய் கிரிஷ் இசையமைக்கிறார். லட்சுமி காந்தன் பிலிம் பேக்டரி தயாரிக்கிறது. படப்பிடிப்பு சென்னை, புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடைபெற இருக்கிறது.