ஐதராபாத்,
பிக் பாஸ் தெலுங்கு நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை ஸ்ரீ சத்யா தனது வாழ்க்கையில் சந்தித்த கசப்பான அனுபவங்களை டாக் ஷோவில் பகிர்ந்துள்ளார்.
பிக் பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ஸ்ரீ சத்யா. அதற்கு முன்பு பல சீரியல்களில் நடித்த அவர், பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களிடையே தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். தனது அழகான தோற்றமும், பேச்சும் மூலம் பார்வையாளர்களை கவர்ந்த அவர், டிரோபியை வெல்லவில்லை என்றாலும் பெரும் ரசிகர் ஆதரவை பெற்றார். பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின்னர், அவர் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில் ஒரு டாக் ஷோவில் பங்கேற்ற அவர் தனது தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கை குறித்து வெளிப்படையாக பேசினார். அப்போது அவர் குழந்தைப் பருவத்திலும், திரைப்படத் துறையிலும் சந்தித்த பாலியல் தொந்தரவு மற்றும் கசப்பான அனுபவங்களை பகிர்ந்தார்.
ஸ்ரீ சத்யா கூறியதாவது:
“திரைத்துறையில் பல கஷ்டங்களை சந்தித்துள்ளேன். இன்றும் கூட எனக்கு தவறான தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. ஆனால் யாரும் நேரடியாக கேட்பதில்லை. பெண்களின் உடை குறித்து இன்று பலர் பேசுகிறார்கள். ஆனால் ஒரு சின்ன பெண் எந்த மாதிரி உடை அணிய போகிறாள்?. அவர்கள் ஏன் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்?. சிறிய வயதில் நானும் மோசமான அனுபவங்களை சந்தித்தேன். 7-ம் வகுப்பு படிக்கும் போது கூட ஒரு சம்பவம் நடந்தது. சுற்றி மக்கள் இருந்தும் யாரும் உதவவில்லை,” என்று அவர் தெரிவித்தார்.
ஸ்ரீ சத்யாவின் இந்த உணர்ச்சிப்பூர்வமான பேட்டி தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.