புதுடெல்லி,
சர்வதேச அளவிலான சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமான கேன்ஸ் திரைப்பட விழாவின் 75-வது திரைப்பட விழா மே 17-ம் தேதி கேன்ஸில் (பிரான்ஸ்) தெடங்க உள்ளது.
ஒவ்வொரு வருடமும், இந்த திரைப்பட விழாவில் கலந்து கொள்ளவும், தங்களின் படம் அதில் திரையிடப்படுவதும் சர்வதேச திரைக் கலைஞர்களின் கனவாக இருந்து வருகிறது. உலகம் முழுவதும் உள்ள திரைக் கலைஞர்கள் சங்கமிக்கும் கேன்ஸ் திரைப்பட விழா வரும் மே 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த ஆண்டு இந்திய திரைத்துறையின் 12 பிரபல நட்சத்திரங்கள் அடங்கிய குழு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் தலைமையில் பங்கேற்க உள்ளது. அக்குழுவில், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான், கிராமப்புற இசையமைப்பாளர் & பாடகர் மாமே கான், நடிகர் மாதவன், பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக், நடிகைகள் நயன்தாரா, பூஜா ஹெக்டே, தமன்னா பாட்டியா, வாணி திரிபாதி திரைப்பட தணிக்கை வாரியத் தலைவர் பிரசூன் ஜோஷி, இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் சேகர் கபூர் ஆகியோர் அடங்குவர். இவர்கள் அனைவருக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவின் காலா (Gala) வில் சிவப்புக் கம்பள வரவேற்பு வழங்கப்பட உள்ளது.
இந்நிலையில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கேன்ஸ் திரைப்பட விழாவில் தன்னால் கலந்து கொள்ள முடியாது என்று அக்ஷய் குமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், கேன்ஸ் 2022-ல் இந்தியா பெவிலியனில் எங்கள் சினிமாவுக்கு வேரூன்றுவதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம், ஆனால் துரதிர்ஷ்டவசமாக எனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. உங்களுக்கும் உங்கள் முழு குழுவிற்கும் வாழ்த்துக்கள் அனுரக்தாகூர். உண்மையில் நான் அங்கு இருப்பதை இழக்கிறேன் என்று அக்ஷய் குமார் பதிவிட்டுள்ளார்.
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுவது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக ஏப்ரல் 2021-ல், அவர் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்திருந்தார்.