பணக்காரர் ரவிச்சந்திரனுக்கு ஐந்து பிள்ளைகள். அவர்களின் மாமா ரகுவரனும், வீட்டில் வேலை செய்பவர்களும் ஒவ்வொரு வகையில் ரவிச்சந்திரனை ஏமாற்றி பணம் சம்பாதிக்கிறார்கள். இந்த நிலையில் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதற்காக வி.கே.ராமசாமி, ஊரில் இருந்து ஒருவரை அனுப்பிவைப்பார். அந்த நபர் வந்தால், தாங்கள் அடிக்கும் கொள்ளை அம்பலமாகிவிடும் என்று நினைக்கும் ரகுவரன், ரஜினியை அந்த புதிய நபரின் இடத்தில் நடிக்க வைப்பார். ஆனால் ரஜினி, அந்த வீட்டில் நடக்கும் ஒவ்வொரு விஷயங்களையும் பார்த்து மனம் பதறுவார். பிறகு ரஜினி அனைவரையும் திருத்துவார்.
இந்தப் படத்திற்கு விநியோகஸ்தர்களிடம் விலை பேசினோம். இப்போது படங்கள் எதுவும் சரியாகப் போகவில்லை. அதனால் கொஞ்சம் குறைத்துக் கொடுங்கள் என்றார்கள்.
நாங்கள் அப்பச்சி காலத்தில் இருந்தே.. விநியோகஸ்தர்களிடம் அனுசரித்துப் போகும் பழக்கம் கொண்டவர்கள் என்பதால், குறைத்துக் கொண்டோம்.
இதை அறிந்த எஸ்பி.முத்துராமன், பட்ஜெட்டில் எவ்வளவு குறைக்க வேண்டும் என்று என்னிடம் கேட்டார்.
நீங்கள் அதிகம் செலவை இழுத்துவிட மாட்டீர்கள்; பார்த்துக் கொள்ளலாம் என்று அவரிடம் சொன்னேன்.
நான் அப்படி சொல்லியும் கூட தயாரிப்புச் செலவை வெகுவாக குறைத்தார். ஓவர் டைம் வேலை செய்வதை தவிர்த்தார். யூனிட்டுக்கு அசைவ சாப்பாடு கொடுப்பதை, சைவ சாப்பாடாக்கினார். இப்படி தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட கஷ்டத்தில், அவர்களும் பங்கு பெற்றார்கள். இதனால்தான் குறைந்த விலைக்கு படத்தை விற்றும், எங்களால் லாபம் பார்க்க முடிந்தது. இதுபோன்ற காரணங்களால்தான் தயாரிப்பாளர்கள் விரும்பும் யூனிட்டாக, எஸ்பி.முத்துராமனின் யூனிட் நீண்ட காலம் தொழிலில் இருந்தார்கள்.
இந்தப் படத்தில் ரஜினிக்கும், குழந்தைகளுக்கும் வித்தியாசமாக ஒரு பாட்டு வைக்க வேண்டுமென்று முடிவு செய்தோம். பொதுவாக குழந்தைகளுக்கு கார்ட்டூன் பார்க்க ரொம்பப் பிடிக்கும். அதனால் ரஜினி மற்றும் குழந்தைகளோடு கார்ட்டூன்களை நடிக்க வைக்கலாம் என்று நினைத்தோம். இசையமைப்பாளர் சந்திரபோஸ், பாடலாசிரியர் வைரமுத்து ஆகியோரிடம், அந்த பாடலுக்கான சூழலைச் சொல்லி, பாட்டு அமைக்கச் சொன்னோம்.
அவர்களும், நன்மை செய்தால் நன்மை விளையும், தீமை செய்தால் தீமை விளையும் என்ற கருத்தை மையமாக வைத்து ஒரு பாடலை அமைத்தார்கள். அந்தப் பாடல்தான் ராஜா சின்ன ரோஜாவோடு காட்டுப்பக்கம் வந்தானாம்.. என்ற பாடல்.
கார்ட்டூன் பாடல் என்பதால், ஆர்ட் டைரக்டர் சலமிடம் கூறி, கார்ட்டூன் காட்சிக்கு ஏற்றாற்போல் செட் போட்டோம். இதற்கிடையில் கார்ட்டூன்களை ஓவியமாக வரைந்து நடிகர்களுடன் அனிமெட் செய்ய யார் இருக்கிறார்கள் என்று தேடினோம். இதுபோன்ற அனிமெட் விஷயங்களுக்கு மும்பையில் இருந்த ராம்குமார் என்பவர்தான் இந்தியாவிலேயே சிறந்தவர் என்பது தெரியவந்தது. எஸ்பி.முத்துராமனை, அவரைச் சந்திக்க மும்பைக்கு அனுப்பினோம்.
மும்பைக்குச் சென்ற எஸ்பி.முத்துராமன், ராம்குமாரிடம் விவரத்தைக் கூற, அவரோ முழுப் பாடலையும் அனிமெட் செய்வது கஷ்டம். என்னால் முடியாது என்று கூறிவிட்டார்.
அவர் அப்படிச் சொன்னதும் முத்துராமன், நாங்கள் உங்களை அவசரப்படுத்த மாட்டோம். மூன்று மாதங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். முதலில் நடிகர்களை வைத்து பாடல் காட்சிகளை எடுத்து விடுகிறோம். பிறகு அவர்களுடன் அனிமெட் செய்து தாருங்கள் என்று கூறியிருக்கிறார்.
அதைக் கேட்டதும், ஏவி.எம். நிறுவனத்தார் எதையும் திட்டமிட்டு செய்வார்கள் என்பதால், இதற்கு நான் ஒப்புக்கொள்கிறேன் என்று ஒத்துக் கொண்டார்.
பாடலுக்கான படப்பிடிப்பை தொடங்கினோம். இந்த இடத்தில் யானை இருக்கும். இந்த இடத்தில் குரங்கு இருக்கும் என்று கற்பனை செய்து கொண்டு நடிக்கும்படி நடிகர்களிடம் கூறினோம். ரஜினியும், கவுதமியும் புரிந்து கொண்டார்கள். ஆனால் குழந்தைகளுக்கு புரிந்து கொள்வதில் சிரமம் இருந்தது. உடனே அவர்களுக்கு புலியூர் சரோஜாவையும், அவரது உதவியாளர்களையும் ரிகர்சலில் யானையாகவும், குரங்காகவும் நடிக்க வைத்து, டேக்கில் அவர்களைப் போகச் சொல்லிவிட்டு எடுத்தோம். குழந்தைகள் ரிகர்சலில் செய்ததை, இப்போது கற்பனை செய்து கொண்டு அருமையாக நடித்தார்கள். ஒளிப்பதிவாளர் விநாயகமும், ராம்குமார் உதவியாளரும் மிகவும் திறமையோடு, அனிமேஷனுக்கு இடம் விட்டு சூட் செய்தார்கள். இந்தப் பாடல் காட்சியில், கார்ட்டூன் முயல் ரஜினியை உதைக்கும். ரஜினி தடுமாறுவார். இது அனைவரும் சிரிக்கும்படி இருந்தது. அதனால் இதனை தொலைக்காட்சி விளம்பரங்களில் சேர்த்தோம். அது மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
இப்படி நடிகர்களோடு கார்ட்டூன்களை இணைத்து எடுத்தது, இந்தியாவிலேயே இதுதான் முதன் முறை. ராம்குமார் இந்தப் பாடலுக்காக 84 ஆயிரம் படங்களில் கார்ட்டூன்களை வரைந்து மூமெண்ட் கொடுத்திருந்தார். இப்போது இருப்பவர்கள், இதில் என்ன அதிசயம் இருக்கிறது என்று நினைக்கலாம். இப்போது இருப்பது போல் கணினியில் செய்யப்படும் கிராபிக்ஸ் போன்றதல்ல இது.. ஒவ்வொரு காட்சியும் மனித முயற்சியால் உருவாக்கப்பட்டவை.
அடுத்த வாரம்: வேதனை தந்த விழிப்புணர்வு படம்.