டிரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி எழுதி, இயக்கியுள்ள புதிய படம், 'கருப்பு'. சூர்யா கதாநாயகனாக நடித்திருக்கிறார். திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். இந்திரன்ஸ், நட்டி நட் ராஜ், சுவாசிகா, ஷிவதா, சுப்ரீத் ரெட்டி, யோகிபாபு, ஜார்ஜ் மரியான், ஆடுகளம் நரேன் உள்பட பலரும் நடித்துள்ளனர்.
திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் 'கருப்பு' படம் குறித்து படக்குழுவினர் கூறியதாவது:-அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகளை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் ஆக்ஷன், கிராமத்து கடவுள் நம்பிக்கை, கோர்ட் டிராமா என்ற ரீதியில் கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது, கருப்பு. இது சூர்யாவின் 45-வது திரைப்படம் என்பது கூடுதல் சிறப்பம்சம்.
பல்வேறு தடைகளை தாண்டி இந்தப்படம் திரைக்கு வந்திருக்கிறது. இதுவரை பார்க்காத ஒரு பரிமாணத்தில் சூர்யா விருந்து படைத்துள்ளார். இந்த படத்தின் மிகப்பெரிய முதுகெலும்பு அவர் தான். அவரது நடிப்பும், ஆக்ரோஷமும் படத்தை தாங்கிப் பிடித்திருக்கிறது. அவரது ரசிகர்கள் தாண்டி அனைத்து தரப்பினரும் இந்தப் படத்தின் மூலம் அவரை இன்னும் ரசிப்பார்கள். அதேபோல பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் சூர்யாவுடன் திரிஷா ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இன்னமும் இளமையும், துள்ளலும் மாறாத திரிஷா, இந்தப் படத்தில் இன்னும் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார். திரிஷா வரும் சூர்யா இடங்களெல்லாம் கலகலப்பாக நகருகிறது.
இயக்குனர் என்பதை தாண்டி படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் ஆர். ஜே.பாலாஜியும் மிரட்டுகிறார். அவரது புதிய நடிப்பை இந்தப் படத்தில் அனைவருமே பார்க்கலாம். இதர அத்தனை நடிகர்-நடிகைகளும் இந்தப் படத்தில் சிறப்பான நடிப்பை கொட்டி நடித்திருக்கிறார்கள். சொல்லப்போனால் கதாபாத்திரமாகவே வாழ்த்திருக்கிறார்கள். குறிப்பாக கிராமத்து காட்சிகள், கருப்பசாமி சம்பந்தப்பட்ட காட்சிகள் சிலிர்ப்பூட்டி வருகின்றன. ஜி.கே.விஷ்ணுவின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து. சாய் அபயங்கரின் இசை ஆட்டம்போட செய்திருக்கிறது. 'காட் மோட்' உள்ளிட்ட பாடல்களும் கொண்டாடப்பட்டு வருகின்றன. இப்படி ஒட்டுமொத்த படக்குழுவினரின் உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு காரணமாக, படம் இன்றைக்கு வெற்றிப்படமாக மாறியுள்ளது.
உலகம் முழுவதும் இந்த படம் ரூ.200 கோடி வசூலை தாண்டி இருக்கிறது. இன்னும் வசூல் மழை பொழியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றி படமாகவும் பார்க்கப்படுகிறது என்று படக்குழுவினர் கேட்டுக்கொண்டனர்.
இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், மதுரை, திருச்சி, நெல்லை, தூத்துக்குடியில் 'கருப்பு' திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களுக்கு சென்று பார்க்கும் போது அங்கே ரசிகர்களின் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. இப்படி செல்லும் இடம் எங்கும் ரசிகர்களின் வரவேற்கும் மிகுதியாகவே இருந்தது. அந்த வகையில் கருப்பு படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பு அளித்து, படத்தை வெற்றி பெறச் செய்த ரசிகர்களுக்கு கோடான கோடி நன்றிகள். இன்னும் படம் பார்க்காத ரசிகர்கள் தியேட்டர்களுக்கு சென்று கருப்பு படத்தை பார்த்து ஆதரவளிக்க வேண்டுகிறோம்.