நடிகர் விஜய் நடிப்பில் பிரமாண்டமான பொருட்செலவில் உருவாகி வரும் திரைப்படம் 'பீஸ்ட்'. இந்த படத்தை டைரக்டர் நெல்சன் இயக்கி வருகிறார். பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
இந்த படத்தில் டைரக்டர் செல்வராகவன், யோகி பாபு, ஷைன் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்து முடிந்தது. அதன் பின்னர், சென்னை திரும்பி படப்பிடிப்பு நடத்தியது.
இந்த நிலையில், இன்று பீஸ்ட் படப்பிடிப்பு தொடங்கி 100 நாள்கள் நிறைவடைந்துள்ளன. 100-வது நாளை முன்னிட்டு பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை டைரக்டர் நெல்சன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 'இது 100-வது நாள் படப்பிடிப்பு. இந்த அற்புதமான மனிதர்களுடன் 100 நாள் வேடிக்கை' என பதிவிட்டு அந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
பீஸ்ட் படத்தின் அப்டேட்டுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு நெல்சனின் இந்த பதிவு உற்சாகம் அளித்துள்ளது. மேலும் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.