புதுடெல்லி,
ராஜஸ்தான் மாநிலம் சித்தூரை ஆண்ட ராணி பத்மினி வாழ்க்கையை மையமாக வைத்து தயாரான படம் பத்மாவதி. இந்த படத்தில் தீபிகா படுகோனே பத்மினி வேடத்திலும் ரன்வீர் சிங் அலாவுதீன் கில்ஜியாகவும் நடித்துள்ளனர். இயக்குநர் சஞ்செய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவான இந்த படத்தில், ராணி பத்மினியின் சிறப்பை சீர் குலைக்கும் வகையில் படம் தயாரிக்கப்பட்டு இருப்பதாக கூறி ராஜபுத்திரர்கள் இனத்தின் பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.
கடும் எதிர்ப்புகள் கிளம்பியதையடுத்து, குஜராத் உத்தர பிரதேசம் உ ள்ளிட்ட மாநிலங்கள் படத்திற்கு தடைவிதித்தன. இந்த படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்க கூடாது எனவும் கோரிக்கைகள் எழுப்பப்பட்டன. இந்த நிலையில், பத்மாவதி படத்திற்கு சிபிஎப்சி எனப்படும் மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் யூ/ஏ சான்றிதழ் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தில் ஏறக்குறைய 26 காட்சிகளை நீக்க வேண்டும் என்று சிபிஎப்சி தெரிவித்துள்ளதாகவும் படத்தின் பெயர் பத்மாவத் என மாற்றம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்கள் படத்தில் மேற்கொள்ளப்பட்ட பிறகு, படத்திற்கு சான்றிதழ் வழங்கப்பட உள்ளதாகவும் ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. #Padmavati