குருவியாரே, நடிகர் சங்க செயலாளர் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் தீவிர அரசியலுக்குள் வருவாரா? (டி.ஜேக்கப், வேலூர்)
அடுத்த பொது தேர்தலில் தீவிர அரசியலில் குதிக்க விஷால் திட்டமிட்டு இருக்கிறாராம்!
***
தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் மணம் புரிந்த சமந்தா, அடுத்த வாரமே நடிக்க வந்து விட்டாரே..? (சே.பிரவீன்குமார், கம்பம்)
சமந்தா, தொழில் பக்தி மிகுந்தவர். நடிப்புக்குத்தான் முதல் இடமாம். தேன்நிலவு மற்றும் உல்லாச சுற்றுப்பயணங்கள் எல்லாம் அப்புறம் என்கிறார்!
***
திரிஷா இப்போதெல்லாம் புது கதாநாயகனுடன் ஜோடி சேர்ந்து நடிக்கிறாரே...? (கே.பாலாஜி, திருச்சி)
இளம் கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்தால், தானும் இளமையாக தெரியலாம் என்று சில கதாநாயகிகள் கணக்கு போடுகிறார்கள். அவர்களில் திரிஷாவும் ஒருவர்!
***
குருவியாரே, விஜய் சேதுபதி திகில் படத்தில் நடிப்பாரா? (எம்.செந்தூர்பாண்டி, மதுரை)
அவர் ஏற்கனவே பீட்சா என்ற திகில் படத்தில் நடித்து இருக்கிறார். கதையும், கதாபாத்திரமும் அவருக்கு பொருந்தினால், இன்னொரு திகில் படத்தில் கூட நடிக்க தயார் என்கிறார்!
***
அஜித் நடிக்க இருக்கும் விசுவாசம் படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்கும் கதாநாயகி யார்? (எஸ்.அன்வர் அலிகான், ஆற்காடு)
அஜித்துடன் ஜோடி சேர, முன்னணியில் இருக்கும் மூன்று பிரபல கதாநாயகிகள் முயற்சித்து வருகிறார்கள். அதிர்ஷ்டம் யாருக்கு அடிக்கிறதோ?
***
குருவியாரே, நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடித்த சொர்க்கம், எங்கிருந்தோ வந்தாள் ஆகிய இரண்டு படங்களில், அதிக வசூல் செய்த படம் எது? (ஏ.அரவிந்த், விளாத்திகுளம்)
இரண்டு படங்களும் ஒரே நாளில் திரைக்கு வந்து, 100 நாட்களை தாண்டி வெற்றிகரமாக ஓடின. ஒன்றையொன்று மிஞ்சுகிற அளவுக்கு அதிக வசூல் செய்தன!
***
மெதுவாய் மெதுவாய் ஒரு காதல் பாட்டு... என்ற பாடல் இடம் பெற்ற படம் எது? அந்த பாடல் காட்சியில் நடித்தவர்கள் யார்-யார்? (வி.செல்வா, பேராவூரணி)
அந்த பாடல் இடம் பெற்ற படம், அண்ணாநகர் முதல் தெரு. பாடல் காட்சியில் நடித்தவர்கள்: சத்யராஜ்-ராதா!
***
குருவியாரே, சோனியா அகர்வாலை இப்போதெல்லாம் திரைப்படங்களில் பார்க்க முடிவதில்லையே, ஏன்? (சி.தேனப்பன், பாலக்காடு)
சோனியா அகர்வால், மார்க்கெட் இழந்து விட்டார். அவர் கைவசம் படங்கள் இல்லாததால், இப்போது விளம்பர படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்!
***
வில்லனாகவே பல நூறு படங்களில் நடித்த எம்.என்.நம்பியார், குணச்சித்ர பாத்திரத்தில் நடித்து பெயரும், புகழும் பெற்றாரா? (ஆர்.சந்தோஷ், மதுரவாயல்)
கே.பாக்யராஜ் நடித்து இயக்கிய தூறல் நின்னு போச்சு படத்தில், நம்பியார் நகைச்சுவை கலந்த குணச்சித்ர வேடத்தில் நடித்து அமர்க்களப்படுத்தி இருந்தாரே...பார்க்கவில்லையா?
***
குருவியாரே, அமலாபால் அறிமுகமான தமிழ் படம் எது? அவருக்கு திருப்பத்தை ஏற்படுத்திய படம் எது? (கே.பிரதாப், ஊட்டி)
அமலாபால் அறிமுகமான தமிழ் படம், விகடகவி. அவருக்கு திருப்பமாக அமைந்த படம், மைனா!
***
அங்காடி தெரு மகேஷ் என்ன ஆனார்? படங்களில் நடிக்கிறாரா, இல்லையா? (ஏ.பி.முருகேசன், குடியாத்தம்)
வீராபுரம் என்ற புதிய படத்தில், மகேஷ் நடித்து வருகிறார்!
***
குருவியாரே, காஜல் அகர்வாலிடம் நேரில் போய் ஐ லவ் யூ என்று சொன்னால், என்ன செய்வார்? (ராம் சுதாகர், கல்லிடைக்குறிச்சி)
நன்றி என்று கூறி, வசீகரமாக சிரிப்பார்!
***
நடிகை ஜெயசித்ராவின் மகனும், இசையமைப்பாளருமான அம்ரேஷ் கணேஷ் இப்போது எத்தனை படங்களுக்கு இசையமைத்து வருகிறார்? (எஸ்.சதீஷ், திருப்பூர்)
பாஸ்கர் ஒரு ராஸ்கல், யங் மங் சங், கர்ஜனை, சார்லி சாப்ளின்-2 ஆகிய படங்களுடன், வடிவுடையான் இயக்கும் சரித்திர படத்துக்கும் அம்ரேஷ் கணேஷ் இசையமைத்து வரு கிறார்!
***
குருவியாரே, பாகுபலி படத்தில் குண்டாக தெரிந்த அனுஷ்கா, பாகமதி படத்தில் சற்றே மெலிந்து கானப்படுகிறாரே...அவர் உடம்பை குறைத்தது எப்படி? (எம்.ராமலிங்கம், பனைமரத்துப்பட்டி)
அனுஷ்கா உடல் எடையை குறைக்க பட்டினி கிடக்கவில்லை. சினிமாவுக்கு வருவதற்கு முன்பு அவர், யோகா மாஸ்டர் என்பதால், அதுவே உடலை மெலிய வைக்க உதவியதாம்!
***
சிம்புவுக்கும், ஓவியாவுக்கும் இடையே காதல் இருப்பது உண்மையா? (ஜே.செபாஸ்டியன், புதுச்சேரி)
ஒருதலை காதல் இருப்பது உண்மை! அதை, இரு பக்க காதலாக மாற்ற நண்பர்கள் என்ற பெயரில், சிலர் முயற்சி செய்து வருகிறார்கள்!
***
குருவியாரே, நகைச்சுவை பேய் படங்களில் எல்லாம் கோவை சரளா தவறாமல் இடம் பெறுகிறாரே...? (கே.தன்வீர் அகமது, மதுராந்தகம்)
கோவை சரளா இருந்தால், படத்துக்கு கூடுதல் பலம் என்று நகைச்சுவை பேய் பட டைரக்டர்கள் கருதுகிறார்கள்!
***
தனுஷ் ஜோடியாக மயக்கம் என்ன படத்திலும், சிம்பு ஜோடியாக ஒஸ்தி படத்திலும் நடித்த ரிச்சா, இப்போது என்ன செய்து கொண்டிருக் கிறார்? (பா.சரவணன், மயிலாடுதுறை)
ரிச்சா, திரையுலகை விட்டு விலகி விட்டார். இனிமேல் நான் படங்களில் நடிக்க மாட்டேன்...சினிமாவை விட்டு ஒரேயடியாக விலகுகிறேன் என்று அவர் அறிவித்து விட்டார்!
***
டைரக்டர் ஆர்.கே.செல்வமணி இயக்கிய முதல் படம் எது? (ஜெ.பி.முரளி, பெரியகுளம்)
புலன் விசாரணை!