வடிவேலு, சந்தானம் கதாநாயகர்கள் ஆனதால் யோகிபாபுக்கு படங்கள் குவிகின்றன. தற்போது 15-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். நயன்தாராவுடன் நடித்த ஐரா படம் திரைக்கு வந்துள்ளது. இந்த மாதம் ரீலீசாகும் ஜீ.வி.பிரகாசின் குப்பத்து ராஜா, வாட்ச்மேன் படங்களிலும் நடித்துள்ளார். ஜீவாவுடன் நடித்துள்ள கொரில்லா படம் மே மாதம் ரிலீசாகிறது.
யோகிபாபு எமன் வேடத்தில் கதாநாயகனாக நடித்துள்ள தர்ம பிரபு படத்தையும் மே மாதம் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு உள்ளனர். இந்த படத்தின் டிரெய்லர் இப்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த டிரெய்லரில் சமீபத்திய அரசியலை கடுமையாக விமர்சிக்கும் காட்சிகளும், வசனங்களும் உள்ளன. பிரதமர் மோடியை கேலி செய்யும் வசனங்களும் உள்ளன.
பூலோகத்தில்தான் தகுதி இல்லாதவர்களுக்கு பதவி கிடைக்கிறது. இப்போது எமலோகத்திலுமா?.. இங்கு எல்லோரும் தகுதியுடன்தான் இருக்கிறார்கள். அம்மா போனால் சின்னம்மா, அய்யா போனால் சின்னய்யா... அக்கவுண்டில் பணம் போடுகிறேன் என்று சொல்லிவிட்டு ஆடைகளை போட்டுக்கொண்டிருக்கிறாரா?.. போன்ற வசனங்கள் தர்மபிரபு படத்தின் டிரெய்லரில் உள்ளன.
மோடி வங்கி கணக்கில் பணம் போடுவதாக சொல்லிவிட்டு விதவிதமான உடைகளில் வெளிநாடுகளில் சுற்றி வருவதாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்கும் வசனத்தை மறைமுகமாக படத்தில் வைத்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த டிரெய்லர் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.