புதுடெல்லி,
இந்தி திரையுலகில் பழம்பெரும் நடிகரான திலீப் குமாரின் சகோதரர்கள் இசான் கான் (வயது 90) மற்றும் அஸ்லம் கான் (வயது 88). கடந்த ஆகஸ்டு 15ந்தேதி இவர்கள் இருவருக்கும் சுவாச கோளாறு ஏற்பட்டது. இதனால், அவர்கள் மும்பையிலுள்ள லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில், இரண்டு பேருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.
இந்த நிலையில், அஸ்லம் கான் கடந்த ஆகஸ்டு 21ந்தேதி காலை சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய் ஆகியவை ஏற்பட்டிருந்தது. நடிகர் திலீப் குமாரின் மற்றொரு சகோதரரான இசான் கானும் உடல்நிலை மோசமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
எனினும் அவரது சிகிச்சை பலனின்றி இன்று அவர் காலமானார். இதனை திலீப் குமாரின் குடும்ப நண்பரான பைசல் பரூக் டுவிட்டர் வழியே தெரிவித்து உள்ளார். இதனால் கடந்த 2 வாரங்களில் திலீப் குமாரின் இரு சகோதரர்களும் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்து உள்ளனர்.
கடந்த மார்ச் மாதத்தில் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு அமலாவதற்கு சில நாட்களுக்கு முன் நடிகர் திலீப் குமார், எனது மனைவி (முன்னாள் நடிகை சாய்ரா பானு) மற்றும் நான் ஆகிய இருவரும், முன்னெச்சரிக்கையாக தனிமைப்படுத்தி கொண்டுள்ளோம் என டுவிட்டரில் பதிவில் குறிப்பிட்டார். ரசிகர்களும் முடிந்தவரை வீட்டில் இருக்கும்படி கேட்டு கொண்டார்.