சினிமா செய்திகள்

'செல்போனில் ஜனநாயகன் படம் இருந்தால் டெலீட் செய்யுங்கள்' - தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை

“ஜனநாயகன்” திரைப்படத்தை பகிரவோ அல்லது செல்போனில் சேமித்து வைக்கவோ வேண்டாம் என தயாரிப்பு நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை,

ஜனநாயகன் திரைப்படத்தை பதிவிறக்கம் செய்பவர்கள் மற்றும் பகிர்பவர்கள் மீது கடுமையான கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில்,

மர்ம நபர்கள் சிலர் திரைப்படத்தை பதிவிறக்கம் செய்து அதிக அளவில் பகிர்ந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால், படத்தை பதிவிறக்கம் செய்பவர்கள் மற்றும் பகிர்வோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், “ஜனநாயகன்” திரைப்படத்தை செல்போனில் வைத்திருப்பவர்கள் மற்றும் பார்ப்பவர்களும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், டெலிகிராம் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் படத்தை பகிர்வோரை கண்டறிவது எளிது என்பதால், இத்தகைய செயல்களில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் வரும் “ஜனநாயகன்” திரைப்படத்தை பகிரவோ அல்லது செல்போனில் சேமித்து வைக்கவோ வேண்டாம் எனவும் ஏற்கனவே இருந்தால் உடனடியாக நீக்க வேண்டும் என தயாரிப்பு நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.