சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தற்போது எச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம், அடுத்த ஆண்டு (2026) பொங்கல் பண்டிகையில் திரைக்கு வருகிறது. இதில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
அரசியலில் களமிறங்கிய விஜய் நடிக்கும் கடைசி படம் என்று கருதப்படுவதால், ஜனநாயகன் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் முதல்பாடலான "தளபதி கச்சேரி" பாடல் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவின் கோலாலம்பூரில் வருகிற டிசம்பர் 27ம் தேதி பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
இந்த நிலையில், ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், நெல்சன், அட்லீ ஆகியோரும் இதில் கலந்துக்கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது. விஜயின் கடைசி படம் என்பதால் அஜித் கலந்து கொள்வாரா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது
இது ஒரு புறம் இருக்க, 'சிவகார்த்திகேயன்' பராசக்தி பட இசை வெளியீட்டு விழாவில் ரஜினியும், கமல்ஹாசனும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.