இந்தி திரையுலகின் மூத்த நடிகர் அருண் பாலி. இவர் அமீர்கானின் '3 இடியட்ஸ்' படத்தில் நடித்து பிரபலமானார். சவுகந்த், ராஜு பன் கயா ஜென்டில்மேன், கல்நாயக், சத்யா, ஹே ராம், லகே ரஹோ முன்னா பாய். ரெடி, பர்பி, மன்மர்சியான், கேதார்நாத், சாம்ராட் பிருதிவிராஜ், லால்சிங் சத்தா உள்ளிட்ட பல படங்களில் முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்து இருக்கிறார்.
கடைசியாக அமிதாப்பச்சன், ராஷ்மிகா மந்தனா ஆகியோருடன் அருண் பாலி சேர்ந்து நடித்த 'குட்பை' படம் தற்போது திரைக்கு வந்துள்ளது. மும்பை புறநகர் பகுதியில் வசித்து வந்த அருண் பாலிக்கு கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவு ஏற்பட்டது. நரம்புகள் மற்றும் தசைகளுக்கு இடையேயான தொடர்பு செயல் இழப்பு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று பின்னர் வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார்.
இந்த நிலையில் அருண் பாலி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 79. மரணம் அடைந்த அருண் பாலிக்கு ஒரு மகனும், மூன்று மகள்களும் உள்ளனர். அருண் பாலி மறைவுக்கு இந்தி திரையுலகினர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.