சினிமா செய்திகள்

ஹாலிவுட் சண்டை காட்சிகளும்.. சவாலான ‘டூப்’ பின்னணியும்!

ஜாக்கிசான், ஜேம்ஸ் பாண்ட் நடிகர் டேனியல் கிரெக்... போன்ற நடிகர்கள் உயிரை பணயம் வைத்து நடித்துக்கொடுப்பார்கள்.

ஹாலிவுட்டில் பிரமாண்டமான சண்டை காட்சிகளுக்கு பஞ்சமிருக்காது. பாராசூட்டில் இருந்து குதிப்பது, எவரெஸ்ட் மலை உச்சியில் ஏறுவது, ரெயிலின் மேற்கூரையில் நின்றபடி சண்டை போடுவது, உயரமான பாலத்தில் இருந்து தண்ணீரில் குதிப்பது... என ஹாலிவுட் நடிகர்களின் சண்டை காட்சிகள் நம்மை இருக்கையின் நுனிக்கே கொண்டு வந்துவிடும். ஜாக்கிசான், ஜேம்ஸ் பாண்ட் நடிகர் டேனியல் கிரெக்... போன்ற நடிகர்கள் உயிரை பணயம் வைத்து நடித்துக்கொடுப்பார்கள். ஆனால் பெரும்பாலான நடிகர் டூப் எனப்படும் மாற்று நடிகர்களின் மூலம் இத்தகைய காட்சிகளில் இருந்து தப்பித்துக்கொள்வார்கள். சண்டை காட்சிகளில் எந்த நடிகர் ரியலாக நடிக்கிறார், எந்த நடிகர் ரீலாக நடிக்கிறார் என்பதை பார்க்கலாம்...!

ஏஞ்சலீனா ஜோலி

ஹாலிவுட்டின் ஆக்ஷன் நாயகியான ஏஞ்சலீனா ஜோலியின் நடிப்பில் சந்தேகமே வேண்டாம். ஏனெனில் இதுவரை அவர் நடித்திருக்கும் அத்தனை திரைப்படங்களிலும் டூப் நடிகர்களை பயன் படுத்தாமல் இவரே நடித்துக்கொடுத் திருக்கிறார். சால்ட் என்ற ஆக்ஷன் திரைப்படத்தில் பாலத்தில் இருந்து பேருந்தில் குதிக்கும் ஆபத்தான காட்சி யிலும் ஏஞ்சலீனாவே தூள் கிளப்பியிருக்கிறார். இதுதவிர வான்டட் திரைப்படத்தில் வரும் அத்தனை சண்டை காட்சிகளிலும் இவரே நடித்திருக் கிறார்.

* டிவைன் ராக்

கற்பாறை போன்ற உடல் அமைப்புடன் இருக்கும் ஹெர்குலீஸ் நாயகனுக்கு ரிஸ்க் எடுக்க விருப்பம் இல்லை. அதனால் ஆபத்தான காட்சிகளில் ஓய்வெடுத்துக்கொள்வார். ராக்கிற்கு பதிலாக டநோய் ரீட் என்பவர் ஆபத்தான சண்டை காட்சிகளில் நடித்துக்கொடுக்கிறார். ராக் எடை கூடினால், டநோய் ரீடும் எடை கூட்டுகிறார். உடலை குறைத்தால், ராக்குடன் சேர்த்து இவரும் குறைக்கிறார். சில வேளைகளில் ராக்கிற்கும், ரீடிற்கும் வித்தியாசம் கண்டுபிடிப்பதே பெரியவேலையாக மாறிவிடும் என்கிறார்கள், படக்குழுவினர். அந்தளவிற்கு இரட்டையர்கள் போன்ற தோற்றத்தில் கலக்குகிறார்கள்.

* ஜானி டெப்

பைரட்ஸ் ஆப் தி கரேபியன் திரைப்படத்தின் கடல் கொள்ளையனான ஜானி டெப்பிற்கு டூப் நடிகர்களாக நடிக்க ஏராளமான நடிகர்கள் இருக்கிறார்கள். அந்தளவிற்கு ஜானி டெப், சண்டை காட்சிகளை எல்லாம் டூப் நடிகர்களின் கையில் ஒப்படைத்து விடுவாராம். வசனம் பேசுதல், காதலிப்பது, முத்த மழையில் நனைவது போன்றவற்றில் தத்ரூபமாக நடித்துக்கொடுக்கும் ஜானி, சண்டை காட்சிகளில் மட்டும் விடுப்பு எடுத்துக்கொள்கிறார்.

* கிறிஸ்டன் ஸ்டூவர்ட்

ஸ்னேவைட் அன்ட் தி ஹட்ஸ்மேன் திரைப்படத்தின் கதாநாயகி கிறிஸ்டன் ஸ்டூவர்ட், படத்தில் கத்தியை படுவேகமாக சுழற்றியிருப்பார். அத்துடன் போர் காட்சிகளிலும் தத்ரூபமாக நடித்திருப்பார். குதிரையேற்றம், குண்டர்களுடன் உருண்டு பிரண்டு சண்டை, குதிரையில் சீறிபாய்ந்தபடி வாள் சண்டை என அசத்திய கிறிஸ்டனுக்கு டூப் நடிகைகளை பயன்படுத்துவது பிடிக்காது. தன்னால் நடிக்க முடிந்த படங்களை மட்டுமே ஒப்புக்கொண்டு நடிக்கிறார். எத்தகைய சண்டை காட்சியாக இருந்தாலும் தன் கைப்படவே நடித்துக்கொடுப்பாராம்.

* ஜாசன் ஸ்டதம்

டிரான்ஸ்போர்டர், மெக்கானிக், பாஸ்ட் அண்ட் பியூரியஸ் திரைப்படங்களின் நாயகனான ஜாசன் ஸ்டதமும், ரியலான நடிகர் தான். சண்டை காட்சிகளுக்கு டூப் நடிகர் களை நடிக்கவைக்கும் பழக்கம் இவரிடமும் இல்லை. ரியலான சண்டை காட்சிகளுக்கு பெயர்போன ஜாக்கிசானை போன்றே இவரும் உயிரை பணயம் வைத்து நடிக்கிறார். இதுதவிர வேறுசில நடிகர்களின் படங்களிலும் டூப் நடிகராக நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் டூப் நடிகராக ஹாலிவுட்டில் நுழைந்த ஜாசனுக்கு சண்டை காட்சிகள் எல்லாம் சர்வசாதாரணம் என்கிறார்கள் ஹாலிவுட் வட்டாரங்கள்.

* டாம் குரூஸ்

இந்த மிஷன் இம்பாசிபிள் நடிகருக்கு 54 வயதாகிறது. இருப்பினும் டூப் நடிகர்களை உதவிக்கு அழைக்கும் திட்டம் இவரிடம் இல்லையாம். சமீபத்தில் வெளியான மம்மி திரைப்படத்தில் ஏராளமான சண்டை காட்சிகளும், சாகச காட்சிகளும் இடம்பிடித்திருந்தன. அதற்காக இயக்குனர் டூப் நடிகர்களை ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் அவர்களுக்கு வேலை வைக்காமல், கடினமான காட்சிகளையும் எளிதாக முடித்துக்கொடுத்து அசத்தினாராம் டாம் குரூஸ்.

* வின் டீசல்

பாஸ்ட் அண்ட் பியூரியஸ் திரைப்படத்தில் ஏகப்பட்ட சண்டை காட்சிகள் இருக்கும். கார் நேருக்கு நேர் மோதுவது, பள்ளத்தாக்கில் கார் உருண்டு செல்வது, ரெயில்வே டிராக்கை கடப்பது என.... கரணம் தப்பினால் மரணம் என்ற வகையில் பல காட்சிகளை அமைத்திருப்பார்கள். இவ்வளவு சவாலான காட்சிகளில் திரைப்படத்தின் நாயகனான வின் டீசல் நடிப்பதில்லை. முடிந்தவரை தவிர்த்துவிடுகிறார். அதில் டூப் நடிகர்கள் தான் நடிக்கிறார்கள். மற்றபடி சின்ன சின்ன சண்டை காட்சிகளில் வின் டீசல் தூள் கிளப்புகிறார்.

* கிறிஸ் ஈவன்

கேப்டன் அமெரிக்கா நடிகர் கிறிஸ் ஈவனுக்கும் ஆபத்தான சண்டைகள் என்றால் கொஞ்சம் பயம் தான். அதனால் எல்லா திரைப்படங்களிலும் தனக்கு பதிலாக நடிக்க ஒரு டூப் நடிகரை தயாராக வைத்திருக்கிறார். இவர்களை தவிர.... ஸ்பைடர்மேன் கதாநாயகன் கார்பீல்ட், டேக்கன் கதாநாயகன் லியாம் நீசன், டை ஹார்ட் புகழ் புரூஸ் வில்லீஸ், தோர் கதாநாயகன் ஆகிய அனைவருமே ஏதாவது ஒரு கட்டத்தில் டூப் நடிகர்களின் உதவியை தேட வேண்டியிருக்கிறது. ஆனால் ஹாலிவுட்டின் உலகநாயகன் ஜாக்கிசான் மட்டும் எத்தனை வயதானாலும் தனக்கான சண்டை காட்சிகளை டூப் இல்லாமலேயே நடித்து கொடுக்கிறார்.

டூப் நடிகர்கள் உயிரைக்கொடுத்து நடிக்க... ஹாலிவுட் பிரபலங்கள் எளிதாக வேலையை முடித்துவிட்டு சென்று விடுகிறார்கள். இதில் என்ன கொடுமை என்றால்... உயிரை பணயம் வைத்து நடிக்கும் டூப் நடிகர்களுக்கு, சம்பளம் என்பது சொர்ப்பமாகவே கிடைக்கிறது.