சினிமா செய்திகள்

’மகிஷாசூரமர்த்தினியாக மாறப் போகிறேன்’ - பாடகி ஸ்வாகதா பரபரப்பு பதிவு

ஸ்வாகதா அண்மையில் ஒரு பிரபல இசையமைப்பாளர் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றம்சாட்டியிருந்தார்.

சென்னை,

தமிழ் திரையுலகின் பிரபல பின்னணிப் பாடகியான ஸ்வாகதா கிருஷ்ணன், தனக்கு நேர்ந்த பாலியல் ரீதியான கொடுமைகளுக்கு எதிராக நீதிக்காக போராடத் தயாராக இருப்பதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் 200-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ள ஸ்வாகதா கிருஷ்ணன், அண்மையில் அளித்த பேட்டியில், ஒரு பிரபல இசையமைப்பாளர் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றம்சாட்டியிருந்தார். மேலும், அந்த இசையமைப்பாளரால் இன்னும் பல இளம் பெண்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “மகிஷாசூரமர்த்தினியாக மாறி தர்ம யுத்தத்தை தொடங்கப் போகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.