சினிமா செய்திகள்

“நம் வீட்டு பெண் என்றார்கள்... ஆனால்” - திரையுலகில் ஆதரவு கிடைக்காதது குறித்து மனம் திறந்த நடிகை

திரையுலகில் தனக்கு போதிய ஆதரவு கிடைக்காதது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

ஐதராபாத்,

தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த அர்ச்சனா சாஸ்திரி, தனது திரைப்பயணத்தில் சந்தித்த சவால்கள் மற்றும் திரையுலகில் தனக்கு போதிய ஆதரவு கிடைக்காதது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

‘ஸ்ரீ ராமதாசு’ மூலம் கவனம் பெற்ற நடிகை

சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் அர்ச்சனா சாஸ்திரி. குறிப்பாக ‘ஸ்ரீ ராமதாசு’ திரைப்படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.

கடந்த சில ஆண்டுகளாக திரைப்படங்களில் இருந்து விலகி அமைதியாக இருந்து வரும் அவர், சமீபத்திய பேட்டியில் தனது சினிமா அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

பெருமை தரும் படம்... ஆனால் சென்றடையவில்லை

‘கமலாதோ நா பயணம்’ திரைப்படத்தில் விலைமாது கதாபாத்திரத்தில் நடித்தது தனது திரைப்பயணத்தின் முக்கியமான படைப்புகளில் ஒன்று என்று அர்ச்சனா கூறினார். “இந்தப் படத்தை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். ஆனால், அது ரசிகர்களை சரியாக சென்றடையவில்லை என்பதுதான் எனது வருத்தம்” என்றார்.

படம் நல்ல விமர்சனங்களை பெற்ற போதிலும், தயாரிப்பாளர்களுக்கும் தொழில்நுட்ப தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக அது பரவலாக வெளியிடப்படவில்லை என்றும், பின்னர் ஆன்லைனிலும் வெளியாகவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

“நம் வீட்டுப் பெண் என்றார்கள்... ஆனால் ஆதரவு இல்லை”

தெலுங்குத் திரையுலகில் தன்னை அன்பாக “நம் வீட்டுப் பெண்” என்று அழைத்தாலும், உண்மையான ஆதரவு கிடைக்கவில்லை என்று அர்ச்சனா சாஸ்திரி வேதனை தெரிவித்துள்ளார். குறிப்பாக ‘கமலாதோ நா பயணம்’ படத்தின் புரமோஷன் காலத்தில் திரையுலகின் முன்னணி பிரபலங்கள் யாரும் தன்னை ஆதரிக்கவில்லை என்று அவர் கூறினார்.