தெய்வமகள் என்ற டி.வி. தொடரில் நடித்து பிரபலமானவர், வாணி போஜன். அந்த தொடரில் இவர், சத்யா என்ற குடும்ப தலைவி கதாபாத்திரத்தில் மிக சிறப்பாக நடித்து இருந்தார். அந்த கதாபாத்திரமும், வாணி போஜனின் நடிப்பும் பேசப்பட்டது. நிறைய குடும்ப தலைவிகள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.
அதைத்தொடர்ந்து அவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வந்தன. அதை அவர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். அவர் நடித்து வெளிவந்த ஓ மை கடவுளே, லாக்கப் ஆகிய 2 படங்களும் வெற்றி பெற்றன. அதனால் அவருக்கு தொடர்ந்து படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.
இனிமேல் அவர் டி.வி. தொடர்களில் நடிப்பாரா, மாட்டாரா? என்பது குறித்தும், திரைப்பட வாய்ப்புகள் பற்றியும் வாணி போஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் நல்ல படங்களை தேர்வு செய்து, நடிக்க சம்மதித்து இருக்கிறேன். அதனால் டி.வி. தொடர்களில் நடிக்க நேரம் இருக்காது. டி.வி. தொடர்கள் வருடக்கணக்கில் ஓடும். அப்படி வருடக்கணக்கில், சீரியல்களில் நடிக்க முடியாது.
4 புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறேன். அவற்றில் விதார்த் ஜோடியாக நடித்துள்ள படம், மிக வித்தியாசமான கதைக்களத்தை கொண்டது. என் கதாபாத்திரம் மாறுபட்டது.
நான் வெளி மாநிலத்தை சேர்ந்தவள் என்றாலும், சரளமாக தமிழ் பேசுவேன். என் கதாபாத்திரங்களுக்கு நானே டப்பிங் பேசுகிறேன். இதை கடவுள் எனக்கு கொடுத்த வரமாக கருதுகிறேன்.இவ்வாறு வாணி போஜன் கூறினார்.