சென்னை,
கவியரசர் கண்ணதாசன் மற்றும் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் பிறந்தநாளில் இசையமைப்பாளர் இளையராஜா வீடியோ வெளியிட்டு புகழ்ந்திருக்கிறார்.
தமிழ் திரையுலகின் இசை மற்றும் இலக்கிய உலகில் அழியாத முத்திரை பதித்த கண்ணதாசன் மற்றும் எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், இசைஞானி இளையராஜா அவர்களை புகழ்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் பேசிய இளையராஜா, உலகம் முழுவதும் உள்ள இசை ரசிகர்கள் கண்ணதாசன் மற்றும் எம்.எஸ். விஸ்வநாதனின் பிறந்தநாளை கொண்டாடி வருவது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக தெரிவித்தார்.
மேலும், "நீங்கள் அனைவரும் இன்றுதான் அவர்களை நினைத்து கொண்டாடுகிறீர்கள். ஆனால் நான் தினமும் இசையிலேயே இருப்பதால், அவர்களை நினைக்காமல் ஒரு நாளை கூட தொடங்க முடியாது. என்னைப் பொறுத்தவரை, அவர்களை நினைக்காமல் இசையை தொடவே முடியாது. அவர்கள் இருவரும் என் நெஞ்சில் இமைப்பொழுதும் நீங்காத இடத்தை பெற்றிருக்கிறார்கள். அவர்களின் புகழ் என்றும் ஓங்குக" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகளும், மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனின் இசையும் இணைந்து தமிழ் திரையுலகிற்கு எண்ணற்ற காலத்தால் அழியாத பாடல்களை வழங்கியுள்ளன.