வருகிற தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க, த.வெ.சு, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவி வருகிறது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை வருகிற 4-ம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் போட்டியிட்டது. 233 தொகுதிகளில் விசில் சின்னத்திலும், எடப்பாடி தொகுதியில் மட்டும் சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவு அளித்தும் இருந்தது.
தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் த.வெ.க கட்சி தமிழக அரசியல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 29 ஆம் தேதி வெளியான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் சிலவை விஜய்க்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டுள்ளது. அன்று வெளியான கருத்துக் கணிப்புகளில், ஐந்து கணிப்புகள் தி.மு.க ஆட்சி அமைக்கும் என்றும், இரண்டு கணிப்புகள் அ.தி.மு.க ஆட்சி அமைக்கும் என்றும் கூறின.
அதேநேரத்தில் 'ஆக்சிஸ் மை இந்தியா' வெளியிட்ட கருத்துக் கணிப்பில் 35 சதவீத வாக்குகளையும், 234 தொகுதிகளில், 98 முதல் 120 இடங்களில் வென்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைக்கும் என்றும் தெரிவித்தது. இந்த தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் பற்றிய பேசிய பெரும்பாலான அரசியல் ஆர்வலர்கள் தி.மு.க ஆட்சி அமைக்கும் என்றும், த.வெ.க குறிப்பிடத்தக்க வாக்குகளை மட்டும் பெறும் என்றும் கூறியிருந்தார்கள். மேலும் விஜய் உட்பட சில வேட்பாளர்கள் மட்டும் வெற்றியைப் பெறுவர் என்றும் குறிப்பிட்டனர்.
தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளுக்காக த.வெ.க ஆதரவாளர்கள் காத்திருக்கும் இந்த சூழலில், விஜய் புகைப்படம் இருக்கும் பாடலை இசையமைப்பாளர் இளையராஜா தனது யூடியூப் தளத்தில் பகிர்ந்து இருக்கிறார். ‘இது எங்கள் நீதி’ படத்தின் ‘சின்ன தம்பி, உன்னை நம்பி இந்த நாடு காத்திருக்கு...’ பாடலை அவர் பகிர்ந்து இருக்கிறார். இந்தப் படம் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் உருவாக்கியதாகும். ‘இது எங்கள் நீதி’ படத்தில் ராதிகா, ராம்கி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
வரும் திங்களன்று சட்டமன்றத் தேர்தல் முடிவு வெளியாகும் நிலையில, விஜய் புகைப்படத்துடன் இருக்கக் கூடிய பாடலை இளையராஜா பகிர்ந்து இருப்பது தற்போது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.