தெய்வ வாக்கு, சின்ன மாப்ளே, அரவிந்தன், சரோஜா, அரவான், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் உள்பட 20 படங்களை தயாரித்துள்ள அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா, பார்ட்டி என்ற பெயரில் ஒரு புதிய படத்தை தயாரித்து வருகிறார். இது, அவருடைய 21வது படம். இந்த படத்தை வெங்கட் பிரபு டைரக்டு செய்திருக்கிறார். பார்ட்டி பற்றி அவர் கூறியதாவது:
டிசம்பர் 31ந் தேதி, ஒரு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஒரே இரவில், கோவா அருகில் நடக்கிற கதை, இது. படப்பிடிப்புக்காக முதலில் கோவாவைத்தான் தேர்வு செய்தோம். பின்னர் அந்த திட்டத்தை மாற்றிக் கொண்டு, ஆஸ்திரேலியா அருகில் உள்ள பிஜீ தீவை தேர்ந்தெடுத்தோம். சிங்கப்பூரில் இருந்து 10 மணி நேர பயணம்.
படப்பிடிப்பு குழுவினர் மொத்தம் 100 பேர்களுடன் பிஜீ தீவுக்கு சென்றோம். தொடர்ந்து 60 நாட்கள் இரவுபகலாக படப்பிடிப்பை நடத்தி முடித்து இருக்கிறோம். படத்தில் மிகப்பெரிய நட்சத்திர கூட்டம் இருக்கிறது. அதுவே இந்த படத்தின் சிறப்பு அம்சம்.
சத்யராஜ், ஜெயராம், நாசர், ஷாம், ஜெய், சிவா, சுரேஷ் (இவருக்கு இது 300வது படம்), கயல் சந்திரன், ரம்யா கிருஷ்ணன், ரெஜினா, நிவேதா பெத்துராஜ், சஞ்சிதா ஷெட்டி ஆகியோர் நடித்து இருக்கிறார்கள். இவ்வளவு பெரிய நட்சத்திர கூட்டம் வேறு எந்த படத்திலும் இடம் பெற்றிருக்க மாட்டார்கள் என்று கருதுகிறேன். எல்லோருடைய கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் படம் தயாராகி இருக்கிறது. இந்த படத்தில், என் தம்பி பிரேம்ஜி நடிக்கவில்லை. இசையமைத்து இருக்கிறான். பிஜீ தீவில் கேரவன் கிடையாது. எல்லா நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் ஒரு குடும்பமாக இருந்தோம். இதன் அருமை முதலில் தெரியவில்லை. கடைசி நாள் படப்பிடிப்பின்போது, பிரியப் போகிறோமே என்ற வருத்தம் எல்லோரையும் கண்கலங்க வைத்தது.
பிரிவை ஜீரணித்துக் கொண்டு கடைசி நாளில், மிகப்பெரிய பார்ட்டிக்கு ஏற்பாடு செய்தோம். பார்ட்டியை சந்தோஷமாக கொண்டாடினோம்.