சென்னை,
‘வாரணாசி’ படத்தைத் தொடர்ந்து மகேஷ் பாபு, அனில் ரவிபுடி இயக்கத்தில் மீண்டும் நடிக்க உள்ளதாக டோலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் பரவி வந்த நிலையில், அதற்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக இயக்குநர் ரவிபுடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தெலுங்கு திரையுலகில் தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வரும் இயக்குநர்களில் ஒருவர் அனில் ரவிபுடி. இவர் இயக்கிய ‘பகவந்த் கேசரி’, ‘சங்கராந்திகி வஸ்துனாம்’ உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனது படங்களை வெளியிடுவதால், அவரை ரசிகர்கள் செல்லமாக ‘பொங்கல் இயக்குநர்’ என்றும் அழைக்கின்றனர்.
தற்போது ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் ‘வாரணாசி’ திரைப்படத்தில் மகேஷ் பாபு நடித்து வருகிறார். இப்படத்தில் பிரியங்கா சோப்ரா, பிரித்திவிராஜ் சுகுமாரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் 2027-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, ‘வாரணாசி’ படத்தைத் தொடர்ந்து மகேஷ் பாபு, அனில் ரவிபுடி இயக்கத்தில் மீண்டும் நடிக்க உள்ளதாக டோலிவுட் வட்டாரங்களில் தகவல்கள் பரவின. இந்த தகவல் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் விவாதத்தையும் ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்த வதந்திக்கு இயக்குநர் அனில் ரவிபுடியே முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தனது எக்ஸ் தளப் பதிவில், மகேஷ் பாபு தனக்கு மிகவும் பிரியமானவர் என்றும், அவர் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், மகேஷ் பாபுவுடன் அடுத்ததாக இணைவதாக தற்போது பரவி வரும் செய்திகள் முற்றிலும் தவறானவை மற்றும் உண்மையற்றவை என்று அனில் ரவிபுடி தெரிவித்துள்ளார். இதுபோன்ற வதந்திகளை ரசிகர்கள் நம்பவோ அல்லது பரப்பவோ வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதன்மூலம், ‘வாரணாசி’ படத்துக்குப் பிறகு மகேஷ் பாபு மீண்டும் அனில் ரவிபுடி இயக்கத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெறும் வதந்தி என்பது உறுதியாகியுள்ளது.