சினிமா செய்திகள்

விலங்குகள் நல வாரியம் எதிர்ப்பு தீபாவளிக்கு ‘மெர்சல்’ படம் வெளியாவதில் சிக்கலா?

விஜய்யின் ‘மெர்சல்’ படத்துக்கு விலங்குகள் நல வாரியம் தடையில்லா சான்று அளிக்காததால் படம் திரைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

தயாரிப்பாளர் தரப்பில், திட்டமிட்டபடி தீபாவளிக்கு மெர்சல் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் இணைந்து நடித்துள்ள படம் மெர்சல். இந்த படத்தை ரூ.140 கோடி செலவில் தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து உள்ளது. அட்லி இயக்கி உள்ளார். இதில் விஜய் 3 வேடங்களில் நடித்து உள்ளார். இந்த படம் வருகிற 18ந்தேதி தீபாவளியன்று திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

மெர்சல் தலைப்பை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு ஏற்கனவே படத்துக்கு சிக்கல் வந்தது. கடந்த 6ந்தேதி தலைப்பை பயன்படுத்த தடை இல்லை என்று கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. கேளிக்கை வரி பிரச்சினையும் தீர்க்கப்பட்டு தீபாவளிக்கு மெர்சல் படம் திரைக்கு வரும் என்று பட அதிபர்கள் சங்கம் அறிவித்து உள்ளது.

மெர்சல் படம் தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டு யுஏ சான்று பெறப்பட்டுவிட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் விலங்குகள் நல வாரியம் தடையில்லா சான்று வழங்கவில்லை என்றும், எனவே படம் தீபாவளிக்கு வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது என்றும், தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

மெர்சல் படத்தில் புறா பறப்பது போன்ற காட்சி உள்ளது. அது கிராபிக்ஸ் என்று படக்குழுவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அது கிராபிக்ஸ் என்பதற்கான ஆதாரம் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் படத்தில் இடம்பெறும் ஒரு பாம்பின் பெயர் ராஜ நாகம் என்பதற்கு பதிலாக நாக பாம்பு என்று குறிப்பிடப்பட்டு உள்ளது என்றும் எனவே படத்துக்கு இன்னும் சான்றிதழ் வழங்கப்படவில்லை என்றும் விலங்குகள் நல வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாங்கள் தடையற்ற சான்றிதழ் வழங்குவதற்கு முன்னால் தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டது எப்படி என்று கேள்வி எழுப்பி தணிக்கை குழுவுக்கு விலங்குகள் நல வாரியம் கடிதமும் அனுப்பி உள்ளது. இதனால் பட உலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. மெர்சல் படம் தீபாவளிக்கு வெளிவருவதில் சிக்கல் என்று சமூக வலைத்தளங்களிலும் தகவல் பரவி வருகிறது.

இதனை தயாரிப்பாளர் தரப்பில் மறுத்தனர். மெர்சல் படத்துக்கு எதிராக தவறான வதந்திகள் பரவி வருகின்றன. தீபாவளிக்கு மெர்சல் படம் திட்டமிட்டபடி திரைக்கு வரும். தணிக்கையிலும் விலங்குகள் நல வாரியத்திலும் படத்துக்கு எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. சில தகவல்கள் சம்பந்தமான கடிதங்கள் கேட்டனர்.

அது சமர்ப்பிக்கப்பட்டு படத்தை திரைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன என்று அவர்கள் கூறினார்கள். சில தியேட்டர்களில் மெர்சல் படத்துக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிட்டது.