சென்னை,
'ஜி.டி.என்' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட நடிகர் சத்யராஜ், ஜி.டி. நாயுடு அருங்காட்சியகத்தை பார்க்காதது தனக்கு குற்ற உணர்வை ஏற்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய சத்யராஜ், ’கோயம்புத்தூரிலேயே பிறந்து வளர்ந்த நான், இவ்வளவு நாள் ஜி.டி. நாயுடு அருங்காட்சியகத்தை பார்க்காமல் இருந்தது எனக்கு ஒரு குற்ற உணர்வை ஏற்படுத்தியது. ஜி.டி. நாயுடுவின் கண்டுபிடிப்புகள் எடிசனுக்கு இணையாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட வேண்டியவை. அவரின் இறுதி தோற்றத்திற்காக செய்யப்பட்ட மேக்கப் மாற்றம் என்னையே ஆச்சரியப்படுத்தியது" என்று கூறினார்.
நடிகர் மாதவன், தற்போது இந்தியாவின் 'எடிசன்' என்று போற்றப்படும் ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட 'ஜி.டி.என்' திரைப்படத்தில் ஜி.டி. நாயுடுவாக நடித்துள்ளார்.
'ஓஹோ எந்தன் பேபி' படத்தின் இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமார் எழுதி இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில், மாதவனுடன் இணைந்து ஜெயராம், சத்யராஜ், பிரியாமணி, யோகி பாபு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை, கண்டுபிடிப்புகள் மற்றும் சாதனைகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள 'ஜி.டி.என்' திரைப்படம் வரும் 7-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.