சினிமா செய்திகள்

'ஜனநாயகன்' தணிக்கை விவகாரம்: வழக்கை வாபஸ் பெறுகிறதா பட தயாரிப்பு நிறுவனம்?

'ஜனநாயகன்' பட தயாரிப்பு நிறுனம் இன்று இறுதி முடிவு எடுக்கும் என்று சொல்லப்படுகிறது.

தினத்தந்தி

நடிகர் விஜய், நடிகைகள் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ஜனநாயகன். இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 9-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.இந்த படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது. இந்த திரைப்படத்தை பார்த்த தணிக்கை வாரியம் உறுப்பினர்கள், படத்தை மறுஆய்வு குழு பரிசீலனைக்கு பரிந்துரை செய்தனர். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், இந்த படத்தை தயாரித்துள்ள கே.வி.என். புரொடக்‌ஷன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, மறுஆய்வு குழுவுக்கு செய்த பரிந்துரையை ரத்துசெய்து, ஜனநாயகன் படத்துக்கு உடனடியாக தணிக்கை சான்றிதழ் வழங்கவேண்டும் என்று கடந்த 8-ந்தேதி தீர்ப்பு அளித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அடுத்த சில நிமிடங்களில் தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது. தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடையையும் பெற்றது. இதன் பின்னர், இந்த வழக்கை தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் விசாரித்தனர். பின்னர் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டனர். இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நேற்று காலை 10.35 மணியளவில் நீதிபதிகள் பிறப்பித்தனர். அதில், “தணிக்கை சான்றிதழை உடனடியாக வழங்கவேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்கிறோம். படத்தை தயாரித்துள்ள நிறுவனம், மறுஆய்வு குழுவுக்கு தணிக்கை வாரியம் பரிந்துரைத்ததை எதிர்த்து மீண்டும் வழக்கை தாக்கல் செய்யவேண்டும். அந்த வழக்கை தனி நீதிபதி மீண்டும் விசாரிக்கவேண்டும். ” என்று உத்தரவிட்டுள்ளனர்.

ஐகோர்ட் உத்தரவால் ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆவது மேலும் தாமதம் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது. தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செல்லலாமா? அல்லது தணிக்கை வாரியத்திடம் மறு ஆய்வு கோரலாமா என்பது பற்றி இன்று கேவிஎன் நிறுவனம் இன்று இறுதி முடிவு எடுக்கும் என்று சொல்லப்படுகிறது. ஜனநாயகன் படத்திற்கும் வரும் அடுத்தடுத்த சோதனைகளால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை