சினிமா செய்திகள்

‘ஜனநாயகன்’ சென்சார் விவகாரம்.. ‘அதில் எனக்கு உடன்பாடு இல்லை’ - விஷால் பேட்டி

கோர்ட்டில் வழக்கு நடக்கும்போது நாம் என்ன செய்ய முடியும்? என விஷால் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை,

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் சென்னை அண்ணா நகரில் உள்ள கந்தசாமி நாயுடு கல்லூரியில் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் நடிகரும், முன்னாள் தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் தனது வாக்கினை பதிவு செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, ‘இந்த முறை தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை?’ என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “நான் தேர்தலில் போட்டியிட்டதற்கு காரணமே, அப்போது பெரியவர்கள் யாரும் போட்டியிடவில்லை என்று சொன்னதால்தான். இந்த முறை பெரியவர்கள், சினிமா தெரிந்தவர்கள், அறிவாளர்கள் தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.

மேலும் எங்கள் வாக்குறுதியான நடிகர் சங்க கட்டிடத்தின் பணிகள் நிறைவடையும் நிலைக்கு வந்துவிட்டன. இன்னும் ஒன்றரை மாதத்தில் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுவிடும். அந்த பணிகளில் நான் கவனம் செலுத்துகிறேன்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, ‘ஜனநாயகன்’ படத்தின் சென்சார் விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த விஷால், “பிரச்சினை வரும்போது ஒருவர் மட்டும் குரல் கொடுப்பதால் எந்த பலனும் இல்லை. தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் மொத்தம் 1,519 பேர் இருக்கிறார்கள். அனைவரும் ஒன்றாக சேர்ந்து குரல் கொடுத்தால் எப்படி இருக்கும்? எனவே, தேர்தலில் ஜெயிப்பவர்கள், தோற்ப்பவர்கள் என அனைவரும் ஒன்றாக சேர்ந்து வேலை செய்ய வேண்டும் என்பது எனது கருத்து.

‘ஜனநாயகன்’ திரைப்பட விவகாரம் கோர்ட்டு விசாரணையில் இருக்கும்போது தயாரிப்பாளர்கள் சங்கம் அதில் தலையிட முடியாது. கே.வி.என். நிறுவனம் ஒருவேளை தயாரிப்பாளர் சங்கத்திடம் வந்திருந்தால் ஏதாவது நடந்திருக்கலாம். ஆனால் கோர்ட்டில் வழக்கு நடக்கும்போது நாம் என்ன செய்ய முடியும்?

மேலும் சென்சார் வாரியத்தில், சுமார் 4 அல்லது 5 பேர் உட்கார்ந்து கோடிக்கணக்கான மக்களுக்காக எடுக்கப்பட்ட படத்தில் எதை வைக்க வேண்டும்? எதை நீக்க வேண்டும்? என முடிவு செய்கிறார்கள். சத்தியமாக சொன்னால், அதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் அதுதான் விதிமுறை என்பதால், அதன்படி நாம் நடந்து கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.