ஐதராபாத்,
நந்தமூரி பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகி வரும் ’என்பிகே111’ படத்தில் நடிகை நயன்தாரா விலகியதாகவும், அவருக்கு பதிலாக காஜல் அகர்வால் நாயகியாக இணைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் தயாரிப்பு தரப்பில் இதுகுறித்து இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில், இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் உருவாகும் இந்த படம், தெலுங்கு திரையுலகின் மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. குறிப்பாக, பாலகிருஷ்ணா - நயன்தாரா கூட்டணி மீண்டும் இணைந்தது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையில், சம்பளம் மற்றும் கால்ஷீட் காரணமாக நயன்தாரா இந்த படத்திலிருந்து விலகியதாக தகவல் வெளியானது. தற்போது அந்த கதாபாத்திரத்திற்காக படக்குழு காஜல் அகர்வாலை அணுகி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தெலுங்கில் பாலகிருஷ்ணாவுடன் மூன்று படங்களில் நடித்த நயன்தாரா, நான்காவது படத்தில் நடிக்க இருந்தநிலையில், திடீரென அந்தப் படத்திலிருந்து விலகியதாக கூறப்படுவது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.