தென்னிந்திய நடிகர் சங்கத்தில் புதிய நிர்வாகிகள் பொறுப்புக்கு வந்துள்ளனர். நாசர் தலைவராகவும், விஷால் பொதுச் செயலாளராகவும், கார்த்தி பொருளாளராகவும் பூச்சி முருகன், கருணாஸ் ஆகியோர் பொருளாளராகவும் தேர்வாகி உள்ளனர். 24 செயற்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் நடிகர் சங்க அறக்கட்டளையின் அறங்காவலர் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டு உள்ளார். சென்னையில் நடந்த நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் கமல்ஹாசனுக்கு இந்த பதவியை வழங்கி அதற்கான ஒப்புதலை பெற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நடிகர் சங்க அறக்கட்டளையின் தலைவராக நாசர் தேர்வாகி உள்ளார். கமல்ஹாசனுடன் பூச்சி முருகன், ராஜேஷ், லதா, கோவை சரளா, சச்சு ஆகியோரும் நடிகர் சங்க அறக்கட்டளை அறங்காவலர் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டும் முயற்சியில் புதிய நிர்வாகிகள் தீவிரமாகி உள்ளனர். இதற்காக நிதி திரட்ட தொடங்கி உள்ளனர். அடுத்த சில நாட்களில் ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர், நடிகைகளை சந்தித்து உதவி கேட்க முடிவு செய்துள்ளனர்.