சினிமா செய்திகள்

நடிகை சரோஜாதேவிக்கு கர்நாடக ரத்னா விருது

கன்னடத்து பைங்கிளி என அழைக்கப்பட்ட நடிகை சரோஜாதேவி பெங்களூருவில் கடந்த ஜூலை 14-ந்தேதி மரணம் அடைந்தார்.

தினத்தந்தி

பழம்பெரும் நடிகை சரோஜாதேவி தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி போன்ற மொழிப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர். சரோஜாதேவி சிறு வயதிலேயே திரைத்துறையில் நுழைந்து 70 ஆண்டுகள் சினிமாக்களில் நடித்துள்ளார். அவரை கன்னடர்கள் அபிநய சரஸ்வதி என்று அழைத்தனர். பிரபல நடிகர்களான எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர்., சிவாஜி கணேசன், ராஜ்குமார், திலீப்குமார், தேவ் ஆனந்த், ராஜேந்திர குமார் உள்ளிட்டோருடன் நடித்து புகழ்பெற்றார்.

கர்நாடக அரசு சார்பில் திரைப்படம், இலக்கியம், விஞ்ஞானம், மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு கடந்த 1992-ம் ஆண்டு முதல் கர்நாடக ரத்னா விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது பெறுபவர்களுக்கு தலா 50 கிராம் தங்கப்பதக்கம், பாராட்டுச் சான்றிதழ், நினைவு பரிசும் வழங்கப்படுகிறது.

இதற்கிடையே கன்னட திரையுலகின் முன்னணி நடிகராக இருந்த விஷ்ணுவர்தன் கடந்த 2009-ம் ஆண்டு திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார். அதுபோல் கன்னடத்து பைங்கிளி என அழைக்கப்பட்ட நடிகை சரோஜாதேவி பெங்களூருவில் கடந்த ஜூலை 14-ந்தேதி மரணம் அடைந்தார். அவர் இறந்தபோது வயது 87.

இந்த நிலையில் கர்நாடக மந்திரிசபை கூட்டம் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், மந்திரிகள், உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், திரைத்துறையில் சாதனை புரிந்ததற்காக நடிகர் விஷ்ணுவர்தன், நடிகை சரோஜாதேவி ஆகியோருக்கு கர்நாடகத்தின் மிக உயரிய விருதான காநாடக ரத்னா விருது வழங்குவது என்று ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டு உள்ளதாக சட்டத்துறை மந்திரி எச்.கே.பட்டீல் கூறினார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது