சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'இசைஞானி' இளையராஜா இசையமைக்க உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'பீட்சா', 'ஜிகர்தண்டா', 'இறைவி', 'பேட்ட', 'மகான்', 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' மற்றும் 'ரெட்ரோ' உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ், தற்போது தனது 10-வது திரைப்படத்தை இயக்க உள்ளார். முற்றிலும் சுயாதீன பாணியில் (Independent style) உருவாக உள்ளது.
இந்நிலையில், தனது 10-வது மைல்கல் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க உள்ளதாக கார்த்திக் சுப்பராஜ் நெகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார். இது இளையராஜாவின் திரையுலக பயணத்தில் 1540-வது திரைப்படமாகும்.
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய 9 படங்களில், 'பேட்ட' (அனிருத்) தவிர மற்ற 8 படங்களுக்கும் சந்தோஷ் நாரயணனே இசையமைத்திருந்தார். இருப்பினும், தனது படங்களில் இளையராஜாவின் கிளாசிக் பாடல்களையோ அல்லது அவரது பின்னணி இசையையோ ஏதேனும் ஒரு முக்கிய காட்சியில் பயன்படுத்துவதை கார்த்திக் சுப்பராஜ் வழக்கமாக வைத்திருந்தார். ஆனால், தற்போது முதன்முறையாக இளையராஜாவையே தனது படத்திற்கு முழுமையாக இசையமைக்க வைத்துள்ளார்.
இசைஞானி இளையராஜாவின் இசையமைப்பில் உருவாகும் இத்திரைப்படத்தின் தலைப்பு மற்றும் இதர நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்புகள் மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.