சென்னை,
கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராக இருந்து, இயக்குனர் மற்றும் நடிகராக மாறியவர் மாரிமுத்து. இவர் நேற்று காலை தான் நடித்து வரும் 'எதிர்நீச்சல்' டி.வி. தொடருக்காக சென்னை வடபழனியில் உள்ள ஸ்டுடியோவில் டப்பிங் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது மாரிமுத்துவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மாரிமுத்து உயிர் பிரிந்தது.
மாரிமுத்துவின் உடல் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அரசியல் பிரமுகர்கள், நடிகர்-நடிகைகள், சின்னத்திரை கலைஞர்கள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் மாரிமுத்துவின் உடல் சொந்த ஊரான தேனி மாவட்டம் வருச நாடு பசுமலை கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த நிலையில் இன்று மாரிமுத்துவின் உடலுக்கு அவரது சொந்த ஊரில் இறுதி சடங்கு நடைபெற்று வருகிறது. வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட அவரது உடலுக்கு வழிநெடுகிலும் ரசிகர்கள், மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பசுமலைத்தேரி மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளது.