சினிமா செய்திகள்

கொடியை உயரே பறக்க விடுங்கள்!.. சஞ்சுசாம்சனின் ஆட்டத்தை பாராட்டிய மோகன்லால்

சஞ்சு சாம்சனின் சிறப்பான ஆட்டத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. லீக் சுற்றுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, நேற்று சூப்பர் 8 சுற்றுக்கான கடைசி போட்டி நடைபெற்றது. அந்த ஆட்டத்தில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடின.

டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் சார்பில் அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் அபிஷேக் சர்மா 10 ரன்களில் வெளியேற, அடுத்து களமிறங்கிய வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர்.

ஆனால், மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன் 50 பந்துகளில் 97 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து இந்திய அணியை வெற்றியடைய வைத்தார். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது. நேற்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றதன்மூலம், அரையிறுதிக்கு இந்திய அணி தகுதி பெற்றது. இதன்படி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, இந்தியா அணிகள் மோத உள்ளன.

இந்த நிலையில், நேற்றைய ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றி பெற செய்த சஞ்சு சாம்சனுக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், மலையாள சினிமாவின் பிரபல நடிகர் மோகன்லால் சஞ்சு சாம்சனை பாராட்டி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சஞ்சுசாம்சனின் அற்புதமான ஆட்டத்தைப் பார்ப்பது உற்சாகமாக இருக்கிறது! அவரது குணத்தையும் திறமையையும் பறைசாற்றும் ஒரு உண்மையிலேயே தலைசிறந்த இன்னிங்ஸ். 2026 டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்குள் நுழைந்ததற்காக ஒட்டுமொத்த இந்திய அணிக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். கொடியை உயரே பறக்க விடுங்கள்! என்று தெரிவித்துள்ளார்.