திருவனந்தபுரம்
நடிகை சனுஷா கேரளத்தின் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள நீலேஸ்வரத்தில் பிறந்தவர். வினயன் இயக்கிய நாளை நமதே என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்தார். பின்னர், திலீப் நாயகனாக நடித்த மிஸ்டர் மருமகன் என்ற மலையாளத் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.மலையாளத்தில் சுமார் 30-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
மேலும், ரேணிகுண்டா, பீமா, அலெக்ஸ் பாண்டியன், உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், இவர் விரைவு ரயிலில் கன்னூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு மாவாலி ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு 1 மணி அளவில் அவரது வாய் அருகில் யாரோ தொடுவதுபோல் உணரவே உடனடியாக எழுந்துள்ளார். அப்போது அருகிலிருந்தவர் தன்னிடம் சில்மிஷம் செய்ய முயல்வதை அறிந்த சனுஷா, உடனே அவரைத் தடுத்து கூச்சலிட்டுள்ளார். சிறிது நேரம் கழித்து அதே பெட்டியில் தன்னுடன் பயணம் செய்த எழுத்தாளர் உன்னி மற்றும் ரஞ்சித் என்பவர் உதவியுடன் அந்த நபரை டிக்கெட் பரிசோதகரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் அவரது பெயர் ஆண்டோ போஸ் எனபதும் அவர் கன்னியாகுமரியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து டிடிஆர் போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். தகவலறிந்து வந்த போலீசார் பாலியியல் தொந்தரவு கொடுத்த நபரை அதிரடியாக கைது செய்தனர்.
இது குறித்து சனுஷா கூறியதாவது:-
இது போன்ற நபர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே புகார் அளித்துள்ளேன். தான் கூச்சலிட்டும் அருகிலிருந்தவர்கள் யாரும் தனக்கு உதவிக்கு வரவில்லை. சம்பவத்தைப் பார்த்த அருகிலிருந்த பயணிகள் தூங்குவதுபோல் நடித்து தன்னைக் காப்பாற்ற வரவில்லை எனவும் நடிகை சனுஷா தெரிவித்துள்ளார்.