சென்னை,
அம்பேத்குமார் தயாரிப்பில் ராஜூமுருகன் இயக்கத்தில் சசிகுமார், சைத்ரா ஆர்ச்சர் நடித்த 'மை லார்ட்' திரைப்படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. படத்தின் வெற்றியை படக்குழுவினர் சென்னையில் கொண்டாடினார்கள்.
இதில் பங்கேற்று பேசிய சசிகுமார், "என் நடிப்பை அனைவருமே பாராட்டி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. நல்ல இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் தோற்கக்கூடாது. முதல் நாள் வசூலை பார்த்து கொஞ்சம் பயந்துபோனேன். பின்னர் அடுத்தடுத்து நாட்களில் வசூல் குவித்தது. நல்ல படங்கள் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் 'பிக்கப்' ஆகும்.
இந்த தைரியமும், அனுபவமும் 'அயோத்தி' படத்திலேயே எனக்கு கிடைத்துவிட்டது. 'அயோத்தி', 'நந்தன்' படங்கள் சமூகத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தின. அந்த வரிசையில், 'மை லார்ட்' படமும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். கிட்னி திருட்டை தடுத்து நிறுத்தும்", என்றார்.
இயக்குனர் ராஜூமுருகன் பேசுகையில், "சினிமாவில் நிறைய விஷயங்கள் மாறி வருகின்றன. ஒரு படம் ரிலீசாகி புரமோஷன் வரை நிறைய விஷயங்களை கவனிக்க வேண்டியிருக்கிறது. புரமோஷன் பணிகளுக்காக நிறைய உழைப்பை போட வேண்டியிருக்கிறது. இது பெரும் சவாலாகவும் இருக்கிறது" என்றார்.