சினிமா செய்திகள்

"சிரித்தால் அசிங்கமாக இருக்கிறாய்" - இயக்குனரின் விமர்சனத்தால் கலங்கிய நடிகை

சுதந்திரமாக புன்னகைக்க முடியவில்லை என்று அவர் தெரிவித்தார்.

சென்னை,

பிரபல பாலிவுட் நடிகை நேஹா தூபியா, இந்தி, தெலுங்கு மற்றும் பஞ்சாபி உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்.

கசப்பான அனுபவம்

இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவம் ஒன்றை அவர் பகிர்ந்துகொண்டார். அதில், ஒருமுறை ஒரு காஸ்டிங் இயக்குனர் தன்னிடம், “நீ சிரிக்கும்போது மிகவும் அசிங்கமாக இருக்கிறாய். உன் முகத்தில் எந்த ஈர்ப்பும் இல்லை. அதனால் இனிமேல் சிரிக்காதே” என்று கூறியதாக நேஹா தெரிவித்தார்.

“அந்த வார்த்தைகள் என்னை பல ஆண்டுகள் துரத்தியது”

இதுகுறித்து மேலும் பேசிய அவர், “அந்த வார்த்தைகள் என் மனதில் எட்டு அல்லது ஒன்பது ஆண்டுகள் வரை ஆழமாக பதிந்துவிட்டன. ‘மிஸ் இந்தியா’ பட்டம் வென்ற பிறகும் இப்படிப்பட்ட விமர்சனத்தை கேட்க வேண்டியிருந்தது. ஒரு கட்டத்தில் நாமே அந்த வார்த்தைகளை உண்மை என்று நம்ப ஆரம்பித்துவிடுகிறோம்” என்று மனவேதனையுடன் கூறினார்.

தன்னம்பிக்கையை பாதித்த அனுபவம்

அந்த ஒரு கருத்து தனது தன்னம்பிக்கையையே பாதித்ததாகவும், படப்பிடிப்பு தளங்களிலும் பொது நிகழ்ச்சிகளிலும் கூட சுதந்திரமாகப் புன்னகைக்க முடியாமல் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

“தன்னம்பிக்கையே மிகப்பெரிய அழகு”

மற்றவர்கள் நிர்ணயிக்கும் அழகுக்கான அளவுகோல்களுக்குள் நாம் பொருந்திப் போவதை விட, நம்முடைய தனித்துவமும் தன்னம்பிக்கையுமே எல்லாவற்றையும் விட முக்கியமானது என்பதைப் பிற்பாடு தான் உணர்ந்துகொண்டதாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.