சென்னை
முழு நேர அரசியலில் ஈடுபட இருப்பதால் நடிகர் கமல் தற்போது தான் நடித்து வரும் இந்தியன் -2 படத்துடன் நடிப்புக்கு முழுக்குப் போடப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் கமல் விஸ்வரூபம் -2, சபாஷ் நாயுடு படங்களில் நடித்து வருகிறார். விஸ்வரூபம் -2 படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து வெளிவர தயாராக உள்ளது.
சபாஷ் நாயுடு படமும் ஓரளவு முடிந்துவிட்டது. இந்த இரு படங்களைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் -2 படத்தில் நடிக்க கமல் ஒப்பந்தமாகியுள்ளார். இதன் படப்பிடிப்பு நடக்கிறது. இரு படங்களுக்கும் மேல் இனிமேல் அவர் தீவிர அரசியலில் ஈடுபடப்போகிறார் எனத் தெரிகிறது. அவர் அரசியலுக்கு வருவதை அவரின் ரசிகர்கள் ஆதரித்தாலும், இனிமேல் அவர் சினிமாவில் நடிக்க மாட்டார் என்கிற செய்தி அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வரும் 21 ஆம் தேதி அப்துல் கலாம் இல்லத்தில் புதிய கட்சி, பெயர், கொள்கைகள் உள்ளிட்டவற்றை கமல் அறிவிக்கவுள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் அமெரிக்காவில் கமல்ஹாசன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் மாற்றம் ஏற்படுத்தவே கட்சி தொடங்குகிறேன். கிராமங்களுக்கு உதவுவதே எனது எண்ணம். தமிழ்நாட்டை நாளைய தமிழர்களுடையதாக மாற்ற வேண்டும். மக்கள் மகிழ்ச்சியாக வாழக்கூடிய பிரதேசமாக மாற வேண்டும் என்பதே எனது கனவு.
ஏற்கனவே நற்பணி மன்றம் மூலம் மக்களுக்கு அங்கும் இங்குமாக பணி செய்தோம். இனி அரசியலில் ஈடுபடுவதன் மூலம் மையத்தில் நின்று மக்களுக்கு சேவை செய்வோம். எனக்கு பிறகும் எனது கட்சி மூலம் இது தொடர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
அரசியலில் தீவிரமாக ஈடுபடப்போவதாக கூறுகிறீர்கள். திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பீர்களா? என்று கேட்கப்பட்டது. இதற்கு கமல்ஹாசன் அளித்த பதில் வருமாறு:-
தீவிர அரசியலில் இறங்கும் போது திரைப்படங்களில் நடிக்கும் எண்ணம் இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்
இதற்கிடையில் நடிகர் கமல் அமெரிக்காவில் தமிழர்ளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அமெரிக்க வாழ் தமிழர்களிடையே அவர் பேசியபோது, தீவிர அரசியலில் ஈடுபடவுள்ளதால், படங்களில் நடிக்க நேரம் கிடைக்குமா தெரியவில்லை என குறிப்பிட்டார்.
இன்று சென்னை ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் வழக்கறிஞர்கள்,நற்பணி இயக்க முக்கிய நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை நடத்தினார்.
பயண திட்டம், கட்சி பெயர் அறிவிப்பு குறித்து ஆலோசிப்பதாக கூறப்படுகிறது.