தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துள்ள டாப்ஸி இந்தி பட உலகிலும் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளிலும் நடித்து வருகிறார். தற்போது தயாரிப்பாளராகவும் மாறி இருக்கிறார். சினிமா அனுபவம் குறித்து டாப்ஸி அளித்துள்ள பேட்டியில், நான் சினிமாவுக்கு வந்த புதிதில் காதல் காட்சிகளிலும், பாட்டுப் பாடி நடனம் ஆடும் காட்சிகளிலும் நடித்தேன். இப்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்கிறேன். தயாரிப்பாளராகவும் மாறி இருக்கிறேன். நடிகையாக இருப்பது எளிது. படப்பிடிப்புக்கு சென்றோம். நடித்தோம், வீட்டுக்கு வந்தோம் என்று இருக்கலாம்.
ஆனால் தயாரிப்பாளர் படப்பிடிப்பை தினமும் கண்காணிக்க வேண்டும். படத்தை தரமாக எடுக்கிறார்களா? என்று பார்க்க வேண்டும். பட்ஜெட்டுக்குள் படப்பிடிப்பு நடக்கிறதா? என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும். தயாரிப்பாளரான பிறகு எனக்கு அதிக பொறுப்பு வந்துள்ளது. ஓ.டி.டி. படங்களை விட தியேட்டர்களுக்கு சென்று படம் பார்க்கவே ரசிகர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். ஓ.டி.டி. படங்களுக்கு தணிக்கை இல்லாததால் சில தவறான காட்சிகள் இடம்பெறுகின்றன. அவற்றை குடும்பத்தோடு பார்ப்பதில் சிரமம் உள்ளது. தியேட்டரில் படம் பார்க்கும் அனுபவம் சிறந்தது. ரசிகர்களும் தியேட்டரில் படம் பார்க்கவே ஆர்வம் காட்டுகின்றனர். சமூகத்தில் பெண்களை அங்கே போகாதே, அதை செய்யாதே என்றெல்லாம் சொல்லி கட்டுப்பாட்டோடு வளர்க்கிறார்கள். அதே அறிவுரைகளை ஆண்களுக்கும் சொல்லி வளர்த்தால் பெண்களுக்கு கஷ்டம் என்பதே வராது என்றார்.