சினிமா செய்திகள்

திரைத்துறையில் இருக்கும் சிலரே எனக்கு தடையாக இருக்கின்றனர்- சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் சினிமா துறையில் தன் பங்களிப்பு குறித்து பேசியுள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடித்துள்ள திரைப்படம் ‘தாய் கிழவி’. இந்த படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். இப்படம் வரும் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு, ஜார்ஜ் மரியன், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இதன் அறிமுக விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், நடிகர்கள் சிவகார்த்திகேயன், சரத்குமார், சூரி உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் பேசிய சிவகார்த்திகேயன், “சினிமாவில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தால் போதும் என்றுதான் நினைத்தேன். ஆனால், என்னை கதாநாயகனாக உயர்த்தினார்கள். அந்த நேரத்தில், என் நண்பன் அருண்ராஜா காமராஜாவை கனா மூலம் இயக்குநராக மாற்ற தயாரிப்பில் இறங்கினேன். இன்றுவரை வணிக காரணங்களைத் தாண்டி சில நோக்கங்களுக்காக திரைப்படங்களைத் தயாரித்து வருகிறேன். எனக்கு இந்த இடத்தைக் கொடுத்ததற்காக சினிமா துறைக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைக்கிறேன்.

நான் யாருக்கும் போட்டியாளனாகவோ, யாரையும் தாண்டிச் செல்லவோ, காலி செய்யவோ வரவில்லை. எனக்குக் கிடைத்த வாய்ப்பையும் வாழ்க்கையையும் சரியாகப் பயன்படுத்த வேண்டுமென நினைக்கிறேன். என்னை இப்படியே விட்டுவிடுங்கள். எனக்கும் நிறைய இறக்கங்கள் இருக்கின்றன. கதை கேட்டுதான் நடிக்கிறேன்; ரீமேக் கதைகளில் நடிப்பதில்லை. அதனால், வெற்றியோ, தோல்வியோ என் பங்கு அதில் இருக்கிறது. எப்போதும் எனக்கு ஆதரவாக மக்கள் இருக்கிறார்கள். ஆனால், திரைத்துறையில் இருக்கும் சிலரே தடையாக இருக்கின்றனர். அவர்கள் அத்தடையை நீக்கினால், இன்னும் 4 சிவகுமார் முருகேசனை உருவாக்குவேன்” எனத் தெரிவித்துள்ளார்.