சினிமா செய்திகள்

"குழந்தையே வேண்டாம் என்று நினைத்தேன்... ஆனால் இப்போது" - தாய்மை குறித்து நடிகை உருக்கம்

நடிகை பத்ரலேகா, தாய்மை குறித்து நெகிழ்ச்சியான தகவல்களை பகிர்ந்துள்ளார்.

மும்பை,

பாலிவுட்டில் 'சிட்டிலைட்ஸ்' (CityLights) படத்தின் மூலம் கவனம் ஈர்த்த நடிகை பத்ரலேகா, தாய்மை குறித்து நெகிழ்ச்சியான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். கடந்த ஆண்டு பெண் குழந்தைக்குத் தாயான அவர், ஆரம்பத்தில் தனக்கு இருந்த தயக்கங்களை இப்போது உடைத்துப் பேசியுள்ளார்.

சமீபத்திய பேட்டி அவர் கூறியதாவது, "ஒரு காலத்தில் குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து எனக்கு தயக்கங்களும் சந்தேகங்களும் இருந்தன. குழந்தையே வேண்டாம் என்று கூட யோசித்ததுண்டு. ஆனால் இப்போது என் குட்டி தேவதை பார்வதி (Parvati) என்னுடன் இருப்பதைப் பார்க்கும்போது மிகவும் அழகாக இருக்கிறது. என் வாழ்வின் மிகச் சிறந்த தருணத்தில் நான் இருப்பதாக இப்போது உணர்கிறேன். என் வாழ்க்கையில் நடந்த மிக முக்கியமான மற்றும் திருப்திகரமான விஷயம் தாயானது தான்" என்று கூறினார்.

பத்ரலேகா கடந்த 2021-ம் ஆண்டு நடிகர் ராஜ்குமார் ராவை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு கடந்த ஆண்டு நவம்பர் 15-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு 'பார்வதி பால் ராவ்' எனப் பெயரிட்டுள்ளனர்.

பத்ரலேகா தற்போது 'டோஸ்டர்' (Toaster) என்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளார். ராஜ்குமார் ராவ், சான்யா மல்ஹோத்ரா நடித்துள்ள இப்படம் கடந்த 15-ம் தேதி வெளியானது.