சினிமா செய்திகள்

ரெட் கார்பெட்டில் பிளாஸ்டிக் கவர்… விலை ரூ.1.5 லட்சமா? - இணையத்தை கலக்கிய நடிகை

ஒரு நடிகை பிளாஸ்டிக் கவரால் கவனம் ஈர்த்துள்ளார்.

சென்னை,

பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்று உலகம் முழுவதும் அரசுகளும் பிரபலங்களும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். பல இடங்களில் பிளாஸ்டிக் கவர்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், ஒரு நடிகை அந்த பிளாஸ்டிக் கவரால் கவனம் ஈர்த்துள்ளார்.

சீன நடிகை ஜாங் ஜிங்யி சமீபத்தில் பெய்ஜிங் சர்வதேச திரைப்பட விழா சிவப்பு கம்பள நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது எடுத்த புகைப்படங்களே இதற்குக் காரணம். அதில் அவர் அணிந்திருந்த உடை அல்லது ஆபரணங்கள் அல்ல, அவரது கையில் இருந்த மஞ்சள் நிற பிளாஸ்டிக் கவர்தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

பொதுவாக காய்கறிகள் வாங்க அல்லது குப்பை போட பயன்படுத்தப்படும் அந்த வகை பிளாஸ்டிக் கவரை அவர் ஹேண்ட்பேக் போல கையில் பிடித்து சிவப்பு கம்பளத்தில் போஸ் கொடுத்திருந்தார். இதைப் பார்த்த நெட்டிசன்கள், அது பிரபல லக்சூரி பிராண்ட் வடிவமைத்த பை என்றும், அதன் விலை சுமார் ரூ.1.65 லட்சம் என்றும் சமூக வலைதளங்களில் பரப்பினர்.

ஆனால் பின்னர் அது உண்மையல்ல என்பது தெரியவந்தது. நடிகை கையில் வைத்திருந்தது சாதாரண பிளாஸ்டிக் கவர்தான். அவர் நடித்துள்ள ’தி ஒன்’ திரைப்படத்தின் புரமோஷன் நோக்கத்திலேயே அந்த கவரை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

அந்த படத்தில் அவர் நடித்துள்ள கதாபாத்திரத்தில், மஞ்சள் நிற பிளாஸ்டிக் கவர் அவரது கேட்க முடியாத பெற்றோருடன் தொடர்பு கொள்ளும் ஒரு சின்னமாக பயன்படுத்தப்படுகிறது. அதனை குறிக்கவே சிவப்பு கம்பள நிகழ்ச்சியில் அந்த கவருடன் அவர் போஸ் கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.