சினிமா செய்திகள்

புதிய சர்ச்சையில் சிக்கிய பூஜா ஹெக்டே

அந்த சர்ச்சை குறித்து பூஜா ஹெக்டே விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை,

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் பூஜா ஹெக்டே, சமீபத்தில் சமூக வலைதளங்களில் பரவிய ஒரு வீடியோ காரணமாக விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார். அவரது அடுத்த படமான 'ஹாய் ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை' திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், இந்த விவகாரம் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வைரலான வீடியோ

சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், ரசிகர் ஒருவர் பூஜாவுடன் செல்பி எடுக்க முயன்றபோது, அவரைப் பொருட்படுத்தாமல் பூஜா கடந்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து, நெட்டிசன்கள் பலரும் அவரது செயலை கடுமையாக விமர்சித்தனர்.

சர்ச்சைக்கு பூஜா விளக்கம்

இந்நிலையில், அந்த சர்ச்சை குறித்து பூஜா ஹெக்டே விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறுகையில், “திரைத்துறையினருக்கு உயிர் கொடுப்பதே ரசிகர்கள்தான். சில நேரங்களில் அவசரமான சூழ்நிலைகள் அல்லது அதிக கூட்ட நெரிசல் காரணமாக ரசிகர்களை கவனிக்க முடியாமல் போகலாம். ஆனால் அதற்கு நாங்கள் தலைக்கனம் கொண்டவர்கள் என்று அர்த்தமல்ல” என்றார்.

"ரசிகர்கள் எங்களுக்கு தெய்வங்கள்"

மேலும் பேசிய அவர், “ரசிகர்கள்தான் எங்களின் பலம். எப்போதும் எங்களுக்கு தெய்வங்களை போன்றவர்கள். எனவே, இதுபோன்ற சம்பவங்களை தவறாக புரிந்துகொள்ள வேண்டாம்” என்று கேட்டுக்கொண்டார்.

ஜூன் 5-ம் தேதி வெளியாகும் புதிய படம்

பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகியுள்ள 'ஹாய் ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை' திரைப்படம் ஜூன் 5-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்தப் படத்தில் வருண் தவான், மிருணாள் தாகூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.