சென்னை,
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகும் 'ராக்கா' (Raaka) படத்தின் படப்பிடிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு பிரமாண்ட படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இப்படத்திற்கு தற்காலிகமாக ’ஏஏ23’(AA23) என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், அது பற்றிய சுவாரசியமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
அந்த வகையில், ரசிகர்களின் மனம் கவர்ந்த பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்க பரிசீலிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. பூஜா ஹெக்டே மற்றும் அல்லு அர்ஜுன் ஏற்கனவே ’டிஜே’ மற்றும் பிளாக்பஸ்டர் ஹிட்டான ’வைகுண்டபுரம்’ ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் (Mythri Movie Makers) நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் (Pre-production) விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அட்லீயின் 'ராக்கா' படத்தை முடித்த பிறகு, அல்லு அர்ஜுன் லோகேஷ் கனகராஜின் படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. லோகேஷ் கனகராஜின் விறுவிறுப்பான திரைக்கதையும், அல்லு அர்ஜுனின் ஸ்டைலும் இணையும் இந்தப் படம் இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.