மும்பை,
பாலிவுட் நடிகையும் மாடலுமான பூனம் பாண்டே, சமூக வலைதளங்களில் தொடர்ந்து எதிர்கொள்ளும் விமர்சனங்கள் மற்றும் டிரோல்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
இந்தி, கன்னடம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ள பூனம் பாண்டே, கடந்த காலங்களில் தனது சர்ச்சைக்குரிய கருத்துகள் மற்றும் செயல்களால் அடிக்கடி செய்திகளில் இடம்பிடித்தவர். குறிப்பாக, 2011 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றால் நிர்வாணமாக போஸ் கொடுப்பேன் என்று கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார்.
இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள உருக்கமான வீடியோவில், தன்னை தரக்குறைவாக விமர்சிக்க வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
"என்னைப் பற்றி முழுமையாக அறியாமல் யாரும் முடிவுக்கு வர வேண்டாம். இணையதளங்களில் என்னை தொடர்ந்து விமர்சிப்பதும், தவறாக சித்தரிப்பதும் மிகவும் வேதனையாக இருக்கிறது. நானும் ஒரு மனிதர்தான். எனக்கும் உணர்வுகள் இருக்கின்றன. என்னை பற்றி தீர்ப்பு வழங்குவதற்கு முன் கொஞ்சம் இரக்கம் காட்டுங்கள்," என்று பூனம் பாண்டே தெரிவித்துள்ளார்.
மேலும், திரைப்படத் துறையில் தொடர்ந்து வாய்ப்புகளை பெறுவதற்காக இன்னும் போராடி வருவதாக அவர் கூறியுள்ளார். பூனம் பாண்டேவின் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.