ஆரம்பத்தில் வில்லனாக நடித்துக் கொண்டிருந்த தெலுங்கு நடிகர் கோபிசந்த், பின்னர் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கினா. மிகப்பெரிய வெற்றிப்படம் என்று எதுவும் அமையாவிட்டாலும், அவரது படங்கள் அனைத்தும் ஓரளவு சுமாராக ஓடும் என்பது தெலுங்கு சினிமாத் துறையின் நம்பிக்கை. ஆனால் கடந்த இரண்டு படங்களில் சறுக்கலை சந்தித்திருந்தார், கோபிசந்த்.
இந்த நிலையில் அவரது நடிப்பில் 31-வது படம் அறிவிக்கப்பட்டுள்ளது. 'பீமா' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை, கன்னட மொழி திரைப்பட இயக்குனரான ஹர்ஷா என்பவர் இயக்குகிறார். போலீஸ் அதிகாரியாக கோபிசந்த் நடிக்கிறார். இந்தப் படத்திற்கான முதல் பார்வை (போஸ்டர்) சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இந்தப் படத்தில் கோபிசந்த் ஜோடியாக நடிக்க இரண்டு கதாநாயகிகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர், தமிழ்நாட்டின் நாயகியான பிரியா பவானி சங்கர். மற்றொருவர் மாளவிகா ஷர்மா.