கர்நாடக திரைப்பட வர்த்தக சபையும் காலா படத்தை வெளியிட தடை விதித்து உள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர் பிரகாஷ்ராஜ் மூலம் மேற்கொண்ட சமரச முயற்சியை அந்த அமைப்புகள் ஏற்கவில்லை. காலா படத்துக்கு தடை விதித்ததை கண்டித்து நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியதாவது:-
ரஜினிகாந்த் ஒரு மூத்த நடிகர். அவர் தன்னை அரசியல் தலைவராகவும் காட்டிக்கொண்டு வருகிறார். எனவே கருத்து சொல்லும்போது மிகவும் கவனமாக இருக்கவேண்டும். அதேநேரம் ஒரு திரைப்படம் தடை செய்யப்படுவதற்காக நான் கவலைப்படுகிறேன். இது ரஜினிகாந்துக்கு மட்டும் தொடர்புடையது அல்ல. அவருடன் நடித்த நடிகர்கள், வினியோகஸ்தர்கள் பாதிக்கப்படுகின்றனர். பிரச்சினைக்கு இது தீர்வு அல்ல. போராட அனைவருக்கும் உரிமை உள்ளது. ரஜினிகாந்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க நினைத்தால் காலா படத்தை மக்கள் பார்க்காமல் இருக்கலாம். அப்படி செய்தால் தான் மக்கள் எதிர்க்கிறார்களா? என்று தெரியும். பெரும்பான்மை மக்களுக்கு என்ன தேவை என்பதை வெகு சிலர் தீர்மானிப்பது சரியல்ல.
என்னை கன்னட எதிரி என்று சில அமைப்புகள் சொல்லலாம். அதற்காக கருத்து சொல்லக்கூடாது என்பது இல்லை. தவறு தான். போராட்டக்காரர்கள் பொது இடத்தில் பிரச்சினை ஏற்படுத்துகின்றனர். நாட்டின் குடிமகன் என்ற முறையில் எனக்கு தேர்ந்தெடுக்கும் உரிமை இருக்கவேண்டும். ரஜினிகாந்த் படத்தை பார்ப்பதா? வேண்டாமா? என்பதை நான் தான் முடிவு செய்யவேண்டும். தடை செய்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை.? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.