சென்னை
நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 70- வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அவருக்கு நேரில் வாழ்த்து தெரிவிக்க, ரஜினி வசிக்கும் போயஸ் கார்டன் இல்லம் முன் ஏராளமான ரசிகர்களும், ரசிகைகளும் குவிந்ததால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
ரஜினிகாந்த் தனது அரசியல் திட்டங்களை உறுதியாக அறிவித்த பின்னர் கொண்டாடும் முதல் பிறந்த நாள் இது. அவருக்கு தலைவர்கள்- பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
ரஜினிகாந்த்துக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள்,முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு தலைவர்களும், நடிகர், நடிகைகளும், அவரது ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து உள்ளனர்
ரஜினிகாந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், அன்பான ரஜினிகாந்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். நீண்ட ஆரோக்கியமான வாழ்வை ரஜினிகாந்த் பெற வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், திரு ரஜினிகாந்த் அவர்கள் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ எனது உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டு உள்ள வாழ்த்து செய்தியில் தனது அயராத உழைப்பாலும், அபாரத் திறமையாலும் தமிழ்த் திரையுலகில் தனிமுத்திரை பதித்து சூப்பர் ஸ்டாராக ஆக கோலோச்சி வரும் அன்புச்சகோதரர் ரஜினிகாந்த் அவர்கள் மகிழ்ச்சியுடனும் நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளோடும் வாழ எனது இதயமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன் என கூறி உள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ள வாழ்த்து செய்தியில் அன்பும் பாசமும் கொண்ட இனிய நண்பர் ரஜினிகாந்த் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! 71-ஆவது பிறந்தநாள் கொண்டாடும் தாங்கள் நலமுடன் நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன்! நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களைத் தொலைபேசியில் அழைத்து எனது வாழ்த்தினைத் தெரிவித்தேன் என கூறி உள்ளார்.
நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தொலைபேசி மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். ரஜினிகாந்த் நீண்ட ஆயுளோடும், ஆரோக்கியத்தோடும் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் என கூறினார். கலை உலகில் என் அணுக்கமான நண்பர் ரஜினிகாந்த், எழுபதைத் தொடுகிறார் எழுபது என்பது முதுமையின் இளமை அல்லது இளமையின் பெருமை என வைரமுத்து வாழ்த்து தெரிவித்து உள்ளார். நடிகர் ரஜினிகாந்துக்கு மு.க.அழகிரி தொலைபேசி மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். நான்கு தசாப்தங்களாக தமிழ் சினிமாவை அரசன் போல் ஆளும் தலைவர் ரஜினி என ரஜினிகாந்துக்கு நடிகர் வடிவேலு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார். ரஜினிகாந்த் உடல் ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாழ வாழ்த்துகிறேன் என நடிகர் மகேஷ் பாபு கூறி உள்ளார். இன்று பிறந்த நாள் கொண்டாடும் அனைவருக்கும், அனைவரும் கொண்டாட இன்றைய தினத்தில் பிறந்தவருக்கும் வாழ்த்துகள் என நடிகர் பார்த்திபன் வாழ்த்து தெரிவித்து உள்ளார். ரஜினிகாந்த், சிறந்த ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் ஆசிர்வதிக்கப்பெற வாழ்த்துகிறேன் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வாழ்த்து தெரிவித்து உள்ளார். ரஜினிக்கு மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வாழ்த்து தெரிவித்து உள்ளார். ரஜினிகாந்த்துக்கு டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள்