சென்னை:
“சினிமாவில் இப்போது வாய்ப்பு தருபவர்கள் முதலில் கேட்பது திறமை அல்ல; இன்ஸ்டாகிராமில் எவ்வளவு பாலோயர்ஸ் இருக்கிறார்கள் என்பதுதான்” என்று காமெடி நடிகர் ஷா ரா வேதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், “பாலோயர்ஸை பொறுத்துதான் சம்பளமும் தீர்மானிக்கப்படுகிறது. நான் எப்படி இன்ஸ்டா பாலோவர்ஸை அதிகப்படுத்துவது? என்கிட்ட கவர்ச்சி இல்லையே… மொழுமொழுனு கன்னம் இல்லை… தாடிதான் இருக்கு. விடியற்காலையில தூக்கம் இல்லாம சுத்துறேன். ஏதாவது ஐடியா இருந்தா சொல்லுங்கடா!” என்று நகைச்சுவை கலந்த புலம்பலை வெளிப்படுத்தியுள்ளார்.
சினிமா துறையில் சமூக வலைதள தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், நடிகர்களின் ரசிகர் பட்டாளமும், டிஜிட்டல் ரீச்சும் முக்கிய அம்சமாக மாறியிருப்பதை ஷா ரா தனது பேச்சில் சுட்டிக்காட்டியுள்ளார். திறமைக்கு இணையாக சமூக வலைதளப் புகழும் மதிப்பிடப்படுவது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சினிமாவில் டிஜிட்டல் உலகின் தாக்கம் குறித்து விவாதத்தை கிளப்பியுள்ள ஷா ராவின் இந்த பதிவு தற்போது பரவலாக பேசப்படுகிறது.