பூமணி , கிழக்கும் மேற்கும் ,பூந்தோட்டம் , மிட்டா மிராசு ,முந்திரிக்காடு உள்ளிட்ட படங்களை இயக்கியவர் மு.களஞ்சியம் . இவர் ஒரு சில படங்களில் நடிகராகவும் களம் கண்டிருக்கிறார்.
இந்நிலையில், இயக்குநர் களஞ்சியத்தை சசிகுமார் ‘பூமணி’ படம் தொடர்பாக பாராட்டியுள்ளார். இதற்கு நன்றி தெரிவித்து இயக்குநர் மு.களஞ்சியம் தனது பேஸ்புக் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் “நேற்று சென்னை வடபழனியில் உள்ள கிரீன் பார்க் ஹோட்டலில் இருந்து வெளியே வந்த போது, திரைப்பட இயக்குனரும் நடிகருமான தம்பி சசிகுமார் அவர்களை சந்தித்தேன். இருவரும் நலம் விசாரித்துக் கொண்டோம். தம்பி சசிகுமார் அவர்கள் எனது கரங்களை இறுக பற்றி கொண்டு “உங்கள் முதல் திரைப்படமான பூமணியை நான் மூன்று முறைகளுக்கு மேல் பார்த்த திரைப்படம் என்று சொன்னார். அதோடு உங்கள் திரைப்படம் ‘பூமணி’ வந்து ஓர் ஆண்டுகளுக்கு பிறகு அதே கதையை ‘வாலி’ என்று இயக்குநர் எஸ்.ஏ.சூர்யா எடுத்தார். ‘பூமணி’ திரைப்படத்தைப் போலவே ‘வாலி’ திரைப்படமும் பெரிய வெற்றியடைந்தது. அப்பொழுது, ஒரே கதையை இரண்டு விதமாக திரைக்கதை அமைக்கிற போது இரண்டுமே வெற்றி அடைகிறது என்று நாங்கள் எல்லாம் பேசிக்கொண்டோம்.
உங்களோடு பேச வேண்டுமென்று பலமுறை நான் நினைத்திருக்கிறேன். வாய்ப்பு சரியாக அமையவில்லை. உறுதியாக நாம் சந்தித்து பேசுவோம் அண்ணா என்று சொன்னார். தம்பி சசிகுமார் அவர்களின் உடைய அந்த மனம் திறந்த பகிர்வு எனக்கு பெரும் மகிழ்வை கொண்டு வந்து சேர்த்தது. அவர் ஒரு கள்ளம் கபடம் இல்லாத எளிய மனிதர் என்பது அவர் பேச்சிலிருந்து தெரிந்தது. தம்பி சசிகுமார் அவர்களுக்கு என் மன நிறைந்த வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.