சென்னையில் நடந்த அவதார வேட்டை என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ராதாரவி கலந்து கொண்டு பேசும் போது மீ டூ குறித்து கருத்து தெரிவித்தார். அவர் பேசியதாவது:
சினிமா துறையில் மீ டூ பற்றி பேசப்பட்டு வருகிறது. ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். ஆனால் கூத்தாடி இரண்டு பட்டால் அது ஊருக்கே கொண்டாட்டம். இந்த விவகாரம் பெரிதானால் சினிமாக்காரர்களை யாரும் மதிக்க மாட்டார்கள். எம்.ஜி.ஆரை துப்பாக்கியால் சுட்ட சம்பவத்தை 4 நாட்கள்தான் பரபரப்பாக பேசினார்கள். அதுபோல் மீ டூ வும் சில நாட்களில் காணாமல் போய் விடும்.
10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததை இப்போது பேசுவது சரியாக தெரியவில்லை. மீ டூ சிக்கல் சினிமாக்காரர்களுக்கு மட்டுமல்ல, மந்திரிகளுக்கும் இருக்கிறது. மேக்கப் டெஸ்ட் தனி அறையில்தான் நடக்கும். அப்போது இயக்குனர் அந்த அறைக்குள் வந்தால் அவரது நிலைமை அவ்வளவுதான். அவர் எனது கன்னத்தை கிள்ளினார் என்று சொல்லக்கூடும்.
எனக்கு 65 வயது ஆகிவிட்டது. இதுபோன்ற விவகாரத்தில் இப்போதுதான் நான் சிக்கி இருக்கிறேன். வாழ்க்கையில் ரசம் சோறு சாப்பிடும் நிலையில் இருக்கிறேன். இனி மோர் சோறுதான். சினிமாவை விட்டு விலகும்படி சொன்னால் அதற்கும் தயாராக இருக்கிறேன். மீ டூ சர்ச்சைகள் நல்லது அல்ல. பிரச்சினை கிளப்புகிறவர்களை சினிமாவில் இருந்து விலக்கி வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். அதிரடி வேட்டை படத்தில் கதாநாயகனாக நடிக்கும் விநாயக், நாயகி மீரா நாயர், டைரக்டர் ஸ்டார் குஞ்சுமோன், ஆகியோரும் நிகழ்ச்சியில் பேசினார்கள்.