புதுடெல்லி,
இந்தி திரையுலகில் பழம்பெரும் நடிகையான 69 வயது நிறைந்த சபானா ஆஸ்மி சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை 5 முறை பெற்றுள்ளார். பிலிம்பேர் விருதுகள், சர்வதேச விருதுகள் மற்றும் பிற விருதுகளையும் பெற்றுள்ளார். இந்தியாவின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷண் ஆகியவற்றையும் அவர் பெற்றுள்ளார்.
மராட்டியத்தின் ராய்காட் மாவட்டத்தில் மும்பை-புனே விரைவு சாலையில் காரில் கடந்த சனிக்கிழமை மாலை அவர் சென்று கொண்டிருந்துள்ளார். மும்பையில் இருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள காலாப்பூர் அருகே சென்றபொழுது அவரது கார், லாரி ஒன்றின் பின்புறம் மோதி விபத்திற்குள்ளானது. இதில் ஆஸ்மிக்கு படுகாயம் ஏற்பட்டது.
அவர் உடனடியாக மீட்கப்பட்டு நவி மும்பையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு உள்ளது. எனினும் சிகிச்சைக்கு பின் ஆஸ்மி சீரான நிலையில் இருக்கிறார். தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பின் கீழ் அவர் இருந்து வருகிறார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஆஸ்மியுடன் அவரது கணவர் மற்றும் திரைப்பட பாடலாசிரியரான ஜாவித் அக்தரும் பயணம் செய்துள்ளார். இந்த விபத்தில் அவர் காயமின்றி உயிர் தப்பினார்.
சபானாவின் உடல்நிலை பற்றி அவரது கணவர் ஜாவித் அக்தர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், சபானாவுக்காக வேண்டி கொண்ட மற்றும் நலம்பெற வேண்டுமென செய்திகள் அனுப்பிய திரையுலக பிரபலங்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் எங்களுடைய குடும்பம் நன்றி தெரிவித்து கொள்ள விரும்புகிறது.
சபானா நலமடைந்து வருகிறார். அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து நாளைக்கு சாதாரண வார்டுக்கு கொண்டு செல்லப்படுவார் என தெரிவித்து உள்ளார்.